3.38 லட்சம் வங்கி கணக்குகள் முடக்கம்: கடந்த 6 மாதத்தில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.95,760.49 கோடி மோசடி...நிர்மலா சீதாராமன் தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் 20 நாட்கள் நடைபெறுகிறது. கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன், அவையை சுமூகமாக நடத்துவது  பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கூட்டுவர். அதன்படி, கடந்த 16-ம் தேதி நடந்தது.

Advertising
Advertising

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்திருந்தார். இதில் பிரதமர் மோடி, காங்கிரஸ் சார்பில் அதிர் ரஞ்சன், சிவசேனா சார்பில் விநாயக் ராத், பா.ஜ சார்பில் அர்ஜூன் ராம் மெஹ்வல், திமுக சார்பில்  டி.ஆர்.பாலு, திரிணாமுல் சார்பில் சுதீப் பந்தோபத்யாயா, பகுஜன் சமாஜ் சார்பில் டேனிஸ் அலி, லோக் ஜனசக்தி சார்பில் சிராக் பஸ்வான் உட்பட பலர் கலந்து கொண்டனர். குளிர்காலக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைத்து கட்சிகளும்  ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கிடையே, நேற்று முன்தினம் தொடங்கிய  நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் சோனியா காந்தி குடும்ப பாதுகாப்பு, சென்னை ஐஐடி பாத்திமா தற்கொலை, மகாராஷ்ரா விவசாயிகள் பிரச்சனை, காஷ்மீர் விவகாரம், காற்று மாசு,  இஸ்ரேல் விவகாரம் குறித்து காரசார விவாதங்கள் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில், பொதுத்துறை வங்கிகளில் ரூ.95,700 கோடி அளவுக்கு மோசடி நடந்ததாக மத்திய அரசு,  மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ரிசர்வ் வங்கி தகவலின் படி, கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான 6 மாத  காலத்தில், 5,743 வங்கி மோசடிகள் நடந்துள்ளன. இந்த காலகட்டத்தில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.95,760.49 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது என்று குறிப்பிட்டார். வங்கி மோசடிகளை தடுக்க விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு  வருகின்றன. இதன் ஒருபகுதியாக, செயல்பாட்டில் இல்லாத 3.38 லட்சம் நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்றும் விளக்கமளித்தார்.

Related Stories: