×

ஆதம்பாக்கத்தில் மனைவியை எரித்து கொன்ற ரவுடி கைது

ஆலந்தூர் : ஆதம்பாக்கத்தில் மனைவியை உயிருடன் எரித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஆதம்பாக்கம் கக்கன் நகர் 5வது தெருவை சேர்ந்தவர் ராஜன் (40). இவரது மனைவி பஞ்சவர்ணம் (35). ராஜன் திருட்டு மற்றும் அடிதடி வழக்கில் கைதாகி சிறைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.  சமீபத்தில் கூட செல்போன் திருட்டு வழக்கில் போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்த, ராஜன் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 13ம் தேதி வழக்கம்போல் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பஞ்சவர்ணம், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து, தனது உடலில் ஊற்றிக்கொண்டு  தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கணவனை மிரட்டினார்.

அப்போது, மது போதையில் இருந்த ராஜன், ‘நீ என்ன தற்கொலை செய்வது. நானே உன்னை கொள்கிறேன்,’ எனக்கூறியபடி, சிகரெட் லைட்டரால் மனைவி உடலில்  தீ வைத்துள்ளார். புடவையில் தீப்பற்றியதும் வலி தாங்க முடியாமல்  பஞ்சவர்ணம் அலறியபடி வீட்டின் வெளியே ஓடிவந்து, அங்கும் இங்கும் ஓடியுள்ளார். இதைப்பார்த்த  அக்கம்பக்கத்தினர், உடனடியாக தீயை அணைத்து, படுகாயமடைந்த பஞ்சவர்ணத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பஞ்சவர்ணம் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார்  கொலை வழக்காக பதிவு செய்து, ராஜனை கைது செய்தனர்.

Tags : Rowdy ,Adambakkam Adambakkam , Rowdy arrested ,murdering wife,Adambakkam
× RELATED மனைவி மாயமானதால் விரக்தி குடிநீர்...