போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்

சென்னை : எழும்பூரில் உள்ள அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கோச்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு சார்பில் நேற்று நடந்தது. இதில், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து பேசினார். அப்போது, “குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு ெசன்னை மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வன்முறைக்கு உள்ளாகும் குழந்தைகள் அந்த பாதிப்பு குறித்து தங்கள் பெற்றோர், ஆசிரியர் அல்லது சகோதர, சகோதரியிடம் தெரிவிக்க வேண்டும். மிகவும் அறிமுகமான நெருங்கி பழகிய நபர்களும் கூட பெண் குழந்தைகளிடம் தவறான நோக்கில் தொட்டு பேசுதல், சில்மிசம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அதற்காக எல்லோரையும் சந்தேகப்படவும் வேண்டியதில்லை.

எனவே, குழந்தைகள் மற்றும் பெண்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க ேவண்டும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் உட்பட அனைத்து குற்றங்களையும் தடுக்க காவல்துறைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். பெண் குழந்தைகள் போல் ஆண் குழந்தைகளும் விரிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்றார். நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி, பள்ளி முதல்வர் நித்யா குகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ெசன்னை மாநகர காவல் எல்லையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிகளுக்கு அம்மா ரோந்து வாகனங்களில் சென்று குழந்தைகளுக்கு போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வாங்கி பள்ளிகளில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>