ஆம்புலன்ஸ் வராததால் ஆத்திரம் அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த பாடி, பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் திவ்யஸ்ரீ (3). கடந்த 3 நாட்களாக திவ்யஸ்ரீ காய்ச்சலால் அவதிப்பட்டதால், நேற்று முன்தினம், ராஜா தனது மகளை அழைத்துக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்தார். அப்போது, அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, மாலை 6 மணி அளவில் திவ்யஸ்ரீயை அழைத்துக் கொண்டு பாடி, டி.எம்.பி நகரிலுள்ள அரசு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அங்கு  பணியில் டாக்டர் இல்லை. இதனை அடுத்து, திவ்யஸ்ரீக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காததால், உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. இதனையடுத்து சிறுமியை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர்.

இதனையடுத்து 108 ஆம்புலன்சுக்கு உறவினர்கள் தகவல் கொடுத்து வரவழைக்க முயற்சி செய்தனர். ஆனால்,  2 மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து கொரட்டூர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர்.  இதனை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் சிலர் மதுரவாயலில் இருந்து ஆம்புலன்ஸ் கொண்டு வந்தனர். பின்னர் சிறுமி திவ்யஸ்ரீ மற்றும் அவரது பெற்றோர் ஆம்புலன்சில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். தற்போது அங்கு திவ்யஸ்ரீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பாடி பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: