வியாசர்பாடி, புளியந்தோப்பு பகுதிகளில் சிதிலமடைந்த குடியிருப்புகளில் அச்சத்துடன் வசிக்கும் மக்கள்

* திடீர் திடீரென பெயர்ந்து விழும் மேற்கூரை

* மழைக்காலம் தொடங்கி உள்ளதால் திக்..திக்..

* கண்டுகொள்ளாத குடிசை மாற்று வாரியம்

பெரம்பூர்: வியாசர்பாடி மற்றும் புளியந்தோப்பு பகுதியில் சிதிலமடைந்த குடிசை  மாற்று வாரிய குடியிருப்புகளில் மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.  தற்போது, மழைக்காலம் தொடங்கி உள்ளதால், பெரிய அளவில் அசம்பாவிதம்  ஏற்படுவதற்கு முன், இங்கு வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்,  என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை வியாசர்பாடி  சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலையில், குடிசை மாற்று வாரியம் சார்பில்,  கடந்த 1965ம் ஆண்டு 48 பிளாக்குகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு  கட்டப்பட்டது. ஒவ்வொரு பிளாக்கிலும் 24 வீடுகள் வீதம் கட்டப்பட்டு,  பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இங்கு தற்போது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 53 ஆண்டுகளை கடந்த இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் தற்போது வலுவிழந்து காணப்படுகிறது. இதனால், வீடுகளின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவரில் விரிசல் ஏற்பட்டு, அவ்வப்போது சிமென்ட் பூச்சுகள் உடைந்து விழுவது வாடிக்கையாக உள்ளது. கட்டிடத்தின்  பக்கவாட்டு சுவரில் அரச மரம் மற்றும் ஆலமரங்கள் வளர்ந்து, அதன் வேர்கள்  கட்டிடத்துக்குள் நுழைந்து வீடுகளின் கழிவறை வரை படர்ந்துள்ளதால், கட்டிடம்  மேலும் பலவீனமாகி வருகிறது. அதுமட்டுமின்றி, இந்த கட்டிடங்களின்  படிக்கட்டுகள் மற்றும் மின்சார பெட்டி உள்ள இடங்கள் குளியலறை, சமையலறை  போன்றவை மிகவும் பாழடைந்து ஆபத்தான முறையில் உள்ளது.

தற்போது  மழைக்காலம் என்பதால், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் எப்போது  இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் மக்கள் வசித்து வருகின்றனர். எனவே,  பாழடைந்த நிலையில் உள்ள இந்த குடியிருப்புகளை இடித்து அகற்றிவிட்டு, புதிய  குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும், என அப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட  அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும்  இல்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

இதுகுறித்து அப்பகுதி  குடியிருப்புவாசிகள் கூறுகையில், ‘‘பாழடைந்த நிலையில் உள்ள இந்த  குடியிருப்புகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன.  மேற்கூரை வலுவிழந்து அடிக்கடி பெயர்ந்து விழுவதால், குழந்தைகளுடன்  அச்சத்தில் வசித்து வருகிறோம்.

மேற்கூரை மற்றும் சுவர் விரிசல்  வழியாக மழைநீர் புகுந்து, கட்டிடம் நாளுக்கு நாள் வலுவிழந்து வருகிறது.  இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் பலமுறை புகார் கொடுத்தும் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, இவ்வழியாக கனரக வாகனங்கள் சென்றால்  கட்டிடம் அதிர்கிறது. இதனால், பாதுகாப்பற் முறையில் வசித்து வருகிறோம். எனவே,  இங்குள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு உடனடியாக இதே பகுதியில்  மாற்று இடம் கொடுத்து, பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, இதே பகுதியில் புதிய  கட்டிடம் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

இதேப்போல்,  புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலை பிஎஸ் மூர்த்தி நகர் திட்ட  பகுதியில், குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட 300க்கும் மேற்பட்ட  வீடுகள் உள்ளன. கடந்த 1976ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த குடியிருப்புகள்  தற்போது சிதிலமடைந்துள்ளதால், மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் அடிக்கடி  பெயர்ந்து விழுகின்றன. இதையடுத்து இங்கு வசிக்கும் மக்களுக்கு  குடிசை மாற்று வாரியம் சார்பில் புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு,   பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டது. இதில், 10 பிளாக்குகளில் வசிக்கும் 80  குடும்பத்தினருக்கு புளியந்தோப்பு கேசவ பிள்ளை சாலையில் மாற்று  குடியிருப்பு கட்டித் தருவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு  கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது  வசித்து வரும் குடியிருப்பு கட்டிடங்கள் மிகவும் சிதிலமடைந்துள்ளதால், எந்த  நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள்  அச்சத்துடன் வசித்து வருகின்றனர். எனவே, புதிய குடியிருப்பு கட்டுமான பணி  முடியும் வரை, இங்கு வசிக்கும் மக்களை மாற்று இடத்தில் தற்காலிகமாக தங்க  வைப்பதற்கு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,  என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சமீபத்தில் வடசென்னை பகுதியில்  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தபோது, இந்த பகுதிக்கு வந்து,  இங்கு வசிப்பவர்களுக்கு உடனடியாக உரிய இடத்தை ஒதுக்கீடு செய்யும்படி  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆனால் இதுவரை பயனாளிகளுக்கு அந்த இடம்  தரப்படவில்லை. அதற்கான உத்தரவாதமும் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால்,  பொதுமக்கள் அங்கேயே தங்கி வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால்  இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம், என்பது குடிசை  மாற்று வாரிய அதிகாரிகளுக்கு  நன்கு தெரியும். இதனால், அதிகாரிகள் எந்த  முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சிய போக்குடன் செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாடம் கற்கவில்லை

புளியந்தோப்பு பகுதி எப் பிளாக்கில்  கடந்த 1993ம் ஆண்டு குடிசை மாற்று வாரிய கட்டிடம் ஒன்று இடிந்து  விழுந்ததில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலியாகினர். இச்சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், இந்த சம்பவத்தில் பாடம் கற்காத  குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், தொடர்ந்து அலட்சிய போக்குடன் செயல்பட்டு  வருகின்றனர். இதனால், அங்கு வசிக்கும் மக்களின் பாதுகாப்பு  கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, இங்குள்ள பாழடைந்த குடியிருப்புகளில்  வசிக்கும் மக்களை மாற்று இடத்தில் தங்க வைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories:

>