×

இலங்கை தமிழர்கள் விவகாரம் தமிழக அரசியல் தலைவர்கள் மீது ராஜபக்சே மகன் நமல் பாய்ச்சல்

கொழும்பு: இலங்கை தமிழர் விவகாரத்தில் சில தமிழக அரசியல்வாதிகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் என்று அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் மகன் நமல் குற்றஞ்சாட்டி உள்ளார். இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் மகனும், அந்நாட்டு எம்பி.யுமான நமல் ராஜபக்சே டிவிட்டரில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை தமிழர் விவகாரத்தில், தமிழகத்தின் சில அரசியல் தலைவர்கள் ஒருபோதும் ஆழமாக சிந்தித்தது இல்லை. தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும் செய்ததில்லை. ஆனால், தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக எங்கள் நாட்டு மக்களை பகடைக்காயாக பயன்படுத்துவதுதான் வேதனையாக உள்ளது.

எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டபோது பல நாடுகளின் தலைவர்கள் குறிப்பாக இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் தலைவர்கள் தங்களது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைப்பதற்காக, இலங்கை தமிழ் மக்களின் மீது அக்கறையுள்ளவர்கள் போல் காட்டி முதலை கண்ணீர் வடிகின்றனர்.

ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பா.ம.க. தலைவர் ராமதாஸ், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரின் அறிக்கைகளில் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலை தவிர வேறு எதுவும் இல்லை. தமிழக அரசியல் தலைவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், நீங்கள் அனைவரும் அறிக்கையில் எங்கள் அதிபர் மற்றும் அரசை விமர்சிப்பதை விட்டு நடைமுறை அரசியலில் இலங்கை தமிழ் மக்களை பற்றி சிந்திப்பது சிறந்தது.

Tags : Namal ,Rajapakse ,Tamils ,Sri Lankan ,Sri Lankan Tamil , Rajapakse's son ,Namal leaps, Sri Lankan Tamils issue
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு