×

இலங்கை மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து பிரதமர் பதவியில் இருந்து ரணில் விலக வேண்டும் : மகிந்த ராஜபக்சே வலியுறுத்தல்

கொழும்பு : பிரதமராக உள்ள ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என்று இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே வலியுறுத்தி உள்ளார். இலங்கையில் கடந்த முறை மைத்ரிபால சிறிசேனா அதிபராக இருந்தபோது,  தன்னுடன் கருத்து வேறுபாடு கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயை பதவியில் இருந்து நீக்கினார். அவருக்கு பதிலாக புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த இலங்கை உச்ச நீதிமன்றம், மகிந்த ராஜபக்சேவின் நியமனம் செல்லாது என்று கடந்தாண்டு டிசம்பரில் அறிவித்தது.

இந்நிலையில், இலங்கையில் சில தினங்களுக்கு முன் நடந்த அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் தம்பியான கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். இவர் நேற்று முன்தினம் இலங்கையின் 7வது அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், ராஜபக்சே தனது 74வது பிறந்தநாளையொட்டி அளித்த பேட்டியில், ‘‘புதிய அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்பட அதிபரும், அமைச்சர்களும் ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். எனவே, தேர்தல் மூலம் பொதுமக்கள் அளித்த முடிவுக்கு மதிப்பளித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உடனடியாக பதவி விலக வேண்டும்,’’ என்றார்.

29ம் தேதி இந்தியா வருகிறார் கோத்தபய

இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றதும் கடந்த 17ம் தேதி இந்திய பிரதமர் மோடி அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, இலங்கை - இந்தியா இடையே ஆழ்ந்த தொடர்பு நீடிக்க ஒத்துழைப்பு தருவதாக கோத்தபய தெரிவித்தார். ஆனால், பெரும்பாலான வர்த்தக தொடர்புகளை சீனாவுடன்தான் இலங்கை கொண்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவுடனான உறவை கோத்தபய தொடர்வார் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தேசிய அமைதி குழுவின் முதன்மை இயக்குனர் ஜெகன் ெபரேரா கூறுகையில், ‘‘கோத்தபய ராஜபக்சே, பிரதமர் நரேந்திர மோடியுடன் நட்புறவை தொடரவே விரும்புவார் என்பதே என் தனிப்பட்ட கருத்து. மேலும் தேசியவாதம் மற்றும் வாக்குவங்கி உள்ளிட்ட பிரச்னைகளில் மோடி மாடலை இலங்கையில் கோத்தபய பின்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றார். இந்நிலையில் இலங்கை சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை நேற்று சந்தித்து பேசினார். இதையடுத்து இந்தியாவின் அழைப்பை ஏற்று வரும் 29ம் தேதி தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு கோத்தபய ராஜபக்சே வருகை தருகிறார்.

Tags : Mahinda Rajapaksa Ranil ,Sri Lanka , Ranil should step down ,Prime Minister
× RELATED சுறா மீன் துடுப்புகள், கடல் அட்டைகள் தீவைத்து எரிப்பு