காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் தமிழகம் உட்பட 4 மாநிலங்கள் தண்ணீர் புள்ளி விவரம் தாக்கல்

புதுடெல்லி : காவிரி ஆணையத்தின் 20வது ஒழுங்காற்று குழுவின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக அதன் ஒழுங்காற்று குழுவின் 20வது கூட்டம் தலைவர் நவீன் குமார் தலைமையில் டெல்லியில் உள்ள சேனா பவனில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, புதுவை மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநில உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். தமிழகத்தின் சார்பாக திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவேரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன் மற்றும் உதவி செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாநிலங்களில் உள்ள அணை பராமரிப்பு, அதற்கான நடைமுறைகள், அணை பாதுகாப்பு ஆகியவை குறித்த அனைத்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் உட்பட அந்தந்த மாநில பிரதிநிதிகள் காவிரி நீர் தொடர்பான தங்கள் மாநிலத்தின் தரப்பு நீர் புள்ளி விவரங்கள் மற்றும் கோரிக்கைகளை அறிக்கையாக குழு முன்னிலையில் தாக்கல் செய்துள்ளனர்.

‘நீர்வரத்து திருப்தி’:  காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்துக்குப் பிறகு, குழுவின் தலைவர் நவீன் குமார் அளித்த பேட்டியில், ‘‘காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு திருப்திகரமாக உள்ளது. காவிரியின் குறுக்கே கர்நாடகா, தமிழ்நாடு, கேரளவில் உள்ள 8 அணைகளின் நீர்வரத்து குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 2019-20 நீர் ஆண்டின் படி நவம்பர் 18  வரையிலாக பிலிகுண்டுவுக்கு வந்த நீரின் அளவு குறித்த புள்ளி விவரம் விவாதிக்கப்பட்டது. அதன்படி, அணைகளின் நீர்வரத்து மற்றும் பிலிகுண்டுவுக்கு வரும் நீரின் அளவு இதுவரை திருப்திகரமாக உள்ளது. இந்த குழு கடந்த நீர் ஆண்டுக்கான நீர் நிலவரம் குறித்த புள்ளி விவர பட்டியல் தயாரித்துள்ளது. அந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் குழு உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டு, அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்,’’ என்றார்.

Tags : States ,Cauvery Disciplinary Committee Meeting Filing Water Statistics Cauvery Disciplinary Committee Meeting Filing Water Statistics , 4 States , Cauvery Disciplinary Committee Meeting, Filing Water Statistics
× RELATED ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்களுக்கு மேலும் 19,950 கோடி