பகல்/இரவு டெஸ்ட்... இளஞ்சிவப்பு பந்து! ஈடன் கார்டனில் கிரிக்கெட் திருவிழா

கொல்கத்தா: இந்தியா - வங்கதேசம் மோதும் 2வது டெஸ்ட் பகல்/இரவு போட்டியாக இளஞ்சிவப்பு வண்ணப் பந்தில் விளையாடப்பட உள்ளது. இந்த போட்டிக்காக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் வருகைக்குப் பின்னர் 5 நாட்களுக்கு ஜவ்வாக நீடிக்கும் டெஸ்ட் போட்டிகள் மீது ரசிகர்களின் ஆர்வம் வெகுவாகக் குறையத் தொடங்கிவிட்டது. அலுவலக வேலை நேரத்தில் போட்டி நடப்பதும், டெஸ்ட் போட்டிக்கான ரசிகர்கள் வருகையை பாதித்தது. இதையெல்லாம் கவனத்தில் கொண்ட ஐசிசி, டெஸ்ட் போட்டிகளை மேலும் சுவாரசியமாக்கும் முயற்சியாக பகல்/இரவு டெஸ்ட் போட்டியை அறிமுகம் செய்தது. மேலும், இரவு நேரத்தில்... மின்னொளி வெளிச்சத்தில் பேட்ஸ்மேன்கள் பந்தை தெளிவாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக சிவப்பு நிறப் பந்துக்கு பதிலாக இளஞ்சிவப்பு வண்ண (பிங்க்) பந்துகளை இவ்வகை போட்டிகளில் உபயோகித்தனர். ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையே 2005ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி அடிலெய்டு மைதானத்தில் தொடங்கிய டெஸ்ட் போட்டி தான், கிரிக்கெட் வரலாற்றில் முதன் முதலாக நடந்த பகல்/இரவு டெஸ்ட் போட்டியாகும். இதுவரை 11 பகல்/இரவு டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளதில் ஆஸ்திரேலியா 5 போட்டியில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தால 3 பகல்/இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளன. தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து தலா 2 போட்டிகளிலும், ஜிம்பாப்வே 1 போட்டியிலும் விளையாடி உள்ளன. இலங்கை அணி 3ல் 2 வெற்றி பெற்றுள்ள நிலையில், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து தலா 1 வெற்றியை பதிவு செய்துள்ளன. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 அணியாக விளங்கும் இந்தியா இதுவரை பகல்/இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அடிலெய்டு போட்டியை பகல்/இரவு டெஸ்ட்டாக நடத்த ஆஸி. கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்தபோது அதை இந்திய அணி நிர்வாகம் நிராகரித்துவிட்டது.

நான்கு ஆண்டுகளாக ‘பிங்க்’ பந்து சோதனையை இந்திய அணி தவிர்த்து வந்த நிலையில், பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற சவுரவ் கங்குலியின் அதிரடி முடிவால் இப்போது பகல்/இரவு டெஸ்ட் போட்டிக்கு தயாராகி உள்ளது. இந்தியா - வங்கதேசம் இடையே நாளை மறுநாள் (நவ. 22) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்க உள்ள 2வது டெஸ்ட், இந்திய அணி விளையாடும் முதல் பகல்/இரவு டெஸ்ட் போட்டியாக கிரிக்கெட் வரலாற்றில் இடம் பிடிக்கிறது. அது மட்டுமல்ல, இந்தியாவில் நடைபெறும் முதல் பகல்/இரவு டெஸ்ட் என்ற பெருமையும் இந்த போட்டிக்கு கிடைக்கிறது. இப்போட்டிக்காக ஈடன் கார்டன் மைதானம் முழுவீச்சில் தயாராகி உள்ளதுடன், கொல்கத்தா நகரமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. ஸ்டேடியத்தில் ராட்சத ‘பிங்க்’ பலூனை பறக்கவிட்டுள்ளனர். ஹூக்ளி ஆற்றில் இளஞ்சிவப்பு வண்ணப் படகு மிதந்து கொண்டிருக்கிறது. டிக்கெட் விற்பனையும் சூடுபிடித்து வருகிறது.

* ஒவ்வொரு நாளும் ஆட்டம் பிற்பகல் 1.00 மணிக்கு தொடங்கும். 40 நிமிட உணவு இடைவேளைக்குப் பிறகு 3.40க்கு ஆட்டம் தொடரும்போது மின்விளக்குகள் எரியத் தொடங்கும். மாலை 5.40க்கு தேநீர் இடைவேளை. பின்னர் 6.00 மணி தொடங்கி இரவு 8.00 மணி வரையில் ஆட்டம் நடைபெறும்.
* போட்டியின் தொடக்க விழாவில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் விளையாட்டு, திரைப்பட நட்சத்திரங்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.
* நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய பகல்/இரவு டெஸ்டில் இங்கிலாந்து 58 ரன்னுக்கு சுருண்டுள்ளது.
* துபாயில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த பகல்/இரவு டெஸ்டில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி முச்சதம் விளாசி உள்ளார்.
* வெஸ்ட் இண்டீஸ் ஸ்பின்னர் தேவேந்திர பிஷூ 49 ரன்னுக்கு 8 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்துவீச்சாக பதிவாகி உள்ளது.

Tags : Cricket Festival ,Eden Gardens , Day / Night Test , pink ball, Cricket Festival , Eden Gardens
× RELATED சீர்காழியில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி