நாடாளுமன்ற துளிகள்

ராம்தேவுக்கு திமுக கண்டனம்

யோகா குரு பாபா ராம்தேவ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பெரியாரை ‘தலித் தீவிரவாதி’ என்றும், பெரியார், அம்பேத்கரை பின்பற்றுபவர்கள் ‘அறிவார்ந்த தீவிரவாதிகள்’ என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக எம்பி செந்தில்குமார், பாபா ராம்தேவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் பேசுகையில், ‘‘பெரியார் சமூக சமத்துவத்திற்காகவும், பெண்களுக்கு அதிகாரம் அளித்திடவும் பாடுபட்டவர். ராம்தேவ் போன்றவர்களால் சீர்த்திருத்தவாதியான பெரியாரின் பிம்பத்தை சிதைத்து விட முடியாது’’ என்றார்.

டெல்லி காற்றுமாசு காரசார விவாதம்

மக்களவையில் டெல்லி காற்று மாசு குறித்த விவாதம் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் டெல்லியில் காற்று மாசை குறைக்க கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாஜ எம்பிக்களும், மத்திய அரசை குற்றம்சாட்டி எதிர்க்கட்சி எம்பிக்களும் காரசார விவாதத்தில் பங்கேற்றனர். டெல்லியில் சுவாசிப்பது ஒரே நாளில் 40-50 சிகரெட்  புகைப்பதற்கு சமம் என திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் விமர்சித்தார். நாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கைை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக எம்பி ரவீந்திரநாத் வலியுறுத்தினார். காற்றுமாசு விவகாரத்தில் சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான பாஜ எம்பி கவுதம் கம்பீர், காற்று மாசு விவகாரத்தை அரசியலாக்க கூடாது என்றார். இந்த விவாதத்தில், 543 எம்பிக்களில் 100 பேர் மட்டுமே பங்கேற்றனர். மற்றவர்கள் அவைக்கு வரவில்லை.

ராகுல் வராததை கவனித்த சபாநாயகர்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியிருக்கும் நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடு பயணம் சென்றுள்ளார். இதனால் நேற்று முன்தினமும், நேற்றும் அவர் மக்களவைக்கு வரவில்லை. ஆனால், மற்றொரு காங்கிரஸ் எம்பி கே.சுரேஷ், ராகுலின் இருக்கையில் நேற்று அமர்ந்திருந்தார். கேள்வி நேரத்தில் அவர் எழுந்து பேச முயன்றபோது குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, ‘‘ராகுலிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி ஒன்று பட்டியலிடப்பட்டுள்ளது. அவர் அவையில் இருந்தால் வாய்ப்பளிக்க விரும்புகிறேன்’’ என்றார். அவர் வெளிநாடு சென்றுவிட்டதாக காங்கிரஸ் எம்பிக்கள் தெரிவித்தனர். பின்னர் கே.சுரேஷ் அவருக்கான இருக்கையில் சென்று அமருமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.

இன்னொரு டோக்லாம் அனுமதிக்க விடாதீர்கள்

அருணாச்சல் மாநிலத்தை சேர்ந்த பாஜ எம்பி தபிர் காவ் மக்களவையில் பூஜ்ய நேரத்தில் பேசுகையில், ‘‘அருணாச்சலுக்கு ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் அல்லது உள்துறை அமைச்சர் வரும் போதெல்லாம் சீனா ஆட்சேபம் தெரிவிக்கிறது. கடந்த 14ம் தேதி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தவாங்க் பகுதியில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியதற்கும் சீனா கேள்வி எழுப்புகிறது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, இந்த அவையும், மீடியாக்களும் குரல் கொடுக்க வேண்டும். இன்னொரு டோக்லாம் பிரச்னை அருணாச்சலில் நடந்தால், மாநிலத்தின் 50-60 கிமீ நிலப்பரப்பை சீனா அபகரித்து விடும்’’ என்றார்.

Related Stories:

>