மக்களவையில் தயாநிதி மாறன் எம்பி கேள்வி இஸ்ரேல் உளவு மென்பொருளை மத்திய அரசு பயன்படுத்தியதா? மத்திய அரசு மழுப்பல் பதில்

புதுடெல்லி: ‘மக்களை வேவு பார்க்க, இஸ்ரேலின் பெகாசஸ் உளவு மென்பொருளை மத்திய அரசு பயன்படுத்தியதா?’ என மக்களவையில் திமுக எம்பி. தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மழுப்பலாக பதிலளித்தார்.

இந்தியாவின் பிரபல பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரின் செல்போன் தகவல்கள் வாட்ஸ் அப் மூலமாக இஸ்ரேலை சேர்ந்த கண்காணிப்பு நிறுவனம் ஒன்று, ‘பெகாசஸ்’ மென்பொருளை பயன்படுத்தி உளவு பார்த்ததாக வாட்ஸ் அப் நிறுவனம் சமீபத்தில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது. கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பாக, இந்த மென்பொருள் மூலம் மத்திய அரசு உளவு பார்த்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

 இதுதொடர்பாக மக்களவை திமுக எம்பி தயாநிதி மாறன், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார். அவர், ‘வாட்ஸ் அப் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்.களை அரசு உளவு பார்க்கிறதா? அப்படியெனில், அதற்கான அனுமதி பெறுவதில் மேற்கொள்ளப்படும் நெறிமுறைகள் என்ன? இதுவும் மொபைல் போன்/ தொலைபேசிகளை ஒட்டு கேட்கும் நெறிமுறைகளும் ஒரே மாதிரியானதா? இந்த நோக்கத்திற்காக இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருளை அரசு பயன்படுத்தியதா? அப்படியெனில் அதற்காக விளக்கம் அளிக்க வேண்டும். இதேபோல், பேஸ்புக் மெசஞ்சர், வைபர், கூகுள் மற்றும் பிற தளங்களின் அழைப்புகள், தகவல்களை அரசு ஒட்டு கேட்கிறதா என்ற விளக்கத்தையும் தர வேண்டும்.’ என அதில் கேட்டிருந்தார்.

இந்த கேள்விக்கு மக்களவை கேள்வி நேரத்தில் நேற்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், ‘தகவல் தொழில்நுட்ப சட்டம்-2000ன் பிரிவு 69ன்படி நாட்டின் இறையாண்மையையும், நல்லிணக்கத்தையும் காக்கும் பொருட்டு, எந்த கணினிலும் உள்ள தகவல்களை கண்காணிப்பதற்கும், இடைமறித்து பார்க்கவும் மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடைமறிப்பு அதிகாரம் சட்டப்படியானது. இதற்கான அனுமதியை மத்திய அரசானது மத்திய உள்துறை செயலரிடம் இருந்தும், மாநில அரசுகள் மாநில உள்துறை செயலரிடமிருந்து பெறும். சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட 10 புலனாய்வு அமைப்புகளும் இத்தகவல்களை இடைமறித்து கண்காணிக்க அதிகாரம் பெற்றுள்ளன,’ என கூறியுள்ளார்.

இதில், பெகாசஸ் மென்பொருள் பற்றியோ, வாட்ஸ் அப் தகவல் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் பற்றியோ அமைச்சர் எதுவும் கூறாமல், பொதுவான பதிலை கூறி மழுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: