நலிந்த வீரர்களுக்கு 8 ஆண்டுகளாக ஓய்வூதியம் உயர்த்தவில்லை: பாரபட்சம் காட்டும் தமிழக அரசு

சிறப்பு செய்தி

நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக ஓய்வூதியம் உயர்த்தப்படவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், மத்திய அரசு ரூ.20 ஆயிரம் வரை ஓய்வூதியம் வழங்கி வரும் நிலையில், தமிழக அரசு 8 ஆண்டுகளாக ஓய்வூதியம் உயர்த்தாமல் பாரபட்சம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கடந்த 1992ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆணையம் சார்பில் நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களின் விளையாட்டிற்கான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவர்கள் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் அவர்களது வாழ்வாதாரத்திற்கு ஆதரவு அளிக்க அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மாநில, தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு ஓய்வூதியம் தரப்படுகிறது.

இந்த வீரர்களின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில், மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் கடந்த 2012 முதல் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் பெறுவதற்கு பலர் விண்ணப்பித்தனர். ஆனால், கடந்த 2013ல் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்படவில்லை. ஆனால், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று ஓய்வூதியம் பெற விண்ணப்பித்தவர்களின் ஆயிரக்கணக்கான மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. மேலும், தற்போது 101 நலிந்த விளையாட்டு வீர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாதம் ₹3.36 லட்சம் நிதி செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2012ல் 1000 ஆக இருந்த ஓய்வூதியம் 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது. தற்போது, 8 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது வரை உயர்த்தப்படவில்லை. ஆனால், மத்திய அரசு கோலே இந்தியா என்கிற திட்டத்தில் 10 ஆயிரமாக இருந்த ஓய்வூதியத்தை 20 ஆயிரமாக உயர்த்தி வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற 58 வயதுக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இருப்பினும், தமிழக அரசு சார்பில் இந்த ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது விலைவாசி உயர்வு விண்ணை மூட்டும் வகையில் இருந்தும், அதை மனதில் வைத்து தமிழக அரசு ஓய்வூதியத்தை ரூ.10 ஆயிரம் வரையாவது உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓய்வூதியம் ெபற்று வரும் நலிந்த விளையாட்டு வீரர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும் போது, ‘வயது மூப்பில் உள்ள வீரர்களின் மருத்துவம், பயண செலவு உள்ளிட்ட இதர செலவுகளுக்கு தற்போது வழங்கப்படும் ஓய்வூதியம் போதுமானதாக இல்லை. இதை கருத்தில் கொண்டு நலிந்த வீரர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ஓய்வூதியம் உயர்த்தி தர வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>