ராஜ்ய சபைக்கு அனுப்பிய கலைஞர், முரசொலி மாறன் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி: வைகோ பேச்சு

சென்னை: மாநிலங்களவையின் 250வது கூட்டத் தொடர், நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: 1978, 1984, 1990 ஆகிய ஆண்டுகளில், இந்த அவையின் உறுப்பினராக நான் இடம் பெறுவதற்கு வாய்ப்பு அளித்த திமுக தலைவர் கலைஞருக்கு, எந்நாளும் நான் நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன்.அதேபோல, நான்காவது முறையாக என்னை இந்த அவைக்கு அனுப்பி இருக்கிற, தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அவையில் என்னை வார்ப்பித்த ஆசான் முரசொலி மாறனையும் நினைவு கூர்கின்றேன். இதற்கு முன்பு 18 ஆண்டுகள் இந்த அவையில் உறுப்பினராக இருந்தபொழுது, சிங்கத்தின் சீற்றத்துடன் முழங்கிய பூபேஷ் குப்தா ஆற்றிய உரைகள் என்னைக் கவர்ந்தன.ஒவ்வொரு நாளும் இந்த அவையின் நடவடிக்கைகள் நிறைவு பெறுகின்ற வரையிலும், அவர் இங்கேதான் இருப்பார். அதேபோன்ற மற்றொரு ஆளுமை பேராசிரியர் என்.ஜி.ரங்கா. இந்த அவையின் உறுப்பினர்களாக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய், லால் கிஷன் அத்வானி ஆகியோரிடம் பல பாடங்களைக் கற்று இருக்கிறேன்.

நையாண்டிகளாலும், நகைச்சுவைத் துணுக்குகளாலும், ஒட்டுமொத்த அவையை மட்டும் அல்ல, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியையும் வாய்விட்டுச் சிரிக்க வைத்த ஆளுமை பிலுமோடி. நிதி ஒதுக்கீடு தொடர்பாக, மாநிலங்களவையின் பங்கு குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டது. எனினும், மிகச்சிறந்த நிதி அமைச்சர்கள் எனப் புகழ்பெற்ற வி.பி.சிங், மன்மோகன்சிங், பிரணாப் முகர்ஜி, யஷ்வந்த் சின்கா, அருண் ஜெட்லி ஆகியோர், மாநிலங்களவையில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள்தான். மக்களவையில் நிறைவேறிய மசோதாக்களில் குறைகள் இருந்தால், அவற்றைச் சீர்படுத்தும் மன்றமாக இந்த அவை திகழ்கின்றது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்களை, மாநிலங்களவை தோற்கடித்து இருக்கிறது. பல மசோதாக்களில் மாற்றங்களைச் செய்து இருக்கின்றது.மிக முக்கியமாக, 1978ம் ஆண்டு, அரசியல் சட்டத்தின் 44வது திருத்தத்தையே மாநிலங்களவைதான் முன்மொழிந்தது. இவ்வாறு பேசினார்.

Related Stories:

>