நாடாளுமன்ற வளாகத்தில் வ.உ.சிக்கு வெண்கல சிலை: பிரதமர் மோடிக்கு ஏ.சி.சண்முகம் கோரிக்கை

சென்னை:  புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்ட அறிக்கை:  இந்திய சுதந்திர போரில் வெள்ளையரை எதிர்த்து, அறப்போரில் ஈடுபட்டவர்களுள் வ.உ.சிதம்பரம் பிள்ளை முக்கியமானவர். செல்வ சீமான் குடும்பத்தில் பிறந்த அவர் தனது உடல், பொருள், ஆவி என அனைத்தையும் நாட்டிற்கு அர்ப்பணித்தவர். வெள்ளையருக்கு எதிராக கப்பலோட்டி மக்களால் ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று இன்றும் போற்றப்படுகிறார். சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட காரணத்தால் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் விலங்குகளை போன்று செக்கிழுத்தார். வாழ்வின் இறுதி காலத்தில் வறுமையில் வாடினார். அப்படிப்பட்ட ஒப்பற்ற தியாக தலைவரின் புகழுக்கு பெருமை சேர்க்க வேண்டும். அவரது தியாகம் இன்றைய வருங்கால தலைமுறையினருக்கு தெரிய வேண்டும்.  

 இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் வ.உ.சி.க்கு முழுஉருவ வெண்கலச் சிலையினை நிறுவி, அந்த தியாக தலைவரை போற்றி கவுரவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை கேட்டுக் கொள்கிறேன். வ.உ.சி.யை கவுரவிப்பதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் இதயங்களில் மோடி நீங்காத இடம் பெறுவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories:

>