×

5 புதிய மாவட்டங்களுக்கு டிஆர்ஓக்கள் நியமனம்: அரசு உத்தரவு

நெல்லை: செங்கல்பட்டு உள்பட 5 புதிய மாவட்டங்களுக்கு டிஆர்ஓக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் நெல்லையை பிரித்து தென்காசி, காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு, விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சி, வேலூரை பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசு ஆணையை தமிழக அரசு கடந்த 12ம் தேதி வெளியிட்டது.புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர்கள், எஸ்பிக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய மாவட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 22ம் தேதி முதல் துவக்கி வைக்க உள்ளார். முதலாவதாக தென்காசி மாவட்டத்தை வருகிற 22ம் தேதி தென்காசி இசக்கி மஹாலில் காலை 9.30 மணிக்கு நடக்கும் விழாவில் துவக்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதையடுத்து 5 புதிய மாவட்டங்களுக்கும் டிஆர்ஓக்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ள உத்தரவு: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சாத்தன்காடு இரும்பு மற்றும் எக்கு நிறுவன விற்பனை மேலாண்மை குழுவின் நிர்வாக அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பணியிட மாற்றம் செய்யப்பட்டு திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை முத்திரை பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை தேசிய நகர்ப்புற சுகாதார திட்ட மாநில நகர்ப்புற சுகாதார மேலாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் வளர்ச்சி முகமை பொது மேலாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா தென்காசி மாவட்ட வருவாய் அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை ஆவின் நிறுவன பொது மேலாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் சங்கீதா கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். மேலும் காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களின் நிலஎடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி சென்னை டாஸ்மாக் பொது மேலாளராக (சில்லரை விற்பனை) மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.Tags : TROs ,Districts , 5 New Districts, TRO, Govt
× RELATED தலித் ஆயர்களை நியமிக்க வலியுறுத்தி பிரசாரம்