அமைச்சர் தங்கமணி நிலத்தில் மின்கோபுரம் அமைப்பார்களா? விவசாயிகள் ஆவேச கேள்வி

ஈரோடு:  தமிழகத்தில் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  விவசாயிகளின் போராட்டம் குறித்து நேற்று முன்தினம் அமைச்சர் தங்கமணி கருத்து கூறுகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறி இருந்தார். இது குறித்து உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈசன் கூறியதாவது: உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தன்னெழுச்சியாக குறிப்பாக பெண்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகி உள்ளனர். இப்போராட்டத்தை தூண்டியதே தமிழக அரசும், அமைச்சர் தங்கமணியும்தான். தென்னை மரங்களுக்கான இழப்பீட்டு தொகை என்பது ஆரம்பத்தில் ஒரு மரத்திற்கு 11,200 மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

நாங்கள் 1 லட்சத்து 25 ஆயிரம் கேட்டோம். ஆனால், அதற்கு மறுத்துவிட்ட அரசு, அதன்பின் விவசாயிகளின் போராட்டத்தின் காரணமாக படிப்படியாக உயர்த்தி இன்றைக்கு ₹36,400 வழங்கப்படும் என அரசாணை வெளியிட்டுள்ளது. போராடினால்தான் உரிய இழப்பீடு கிடைக்கும் என்ற நிலையை விவசாயிகைள உருவாக்கி விட்ட தமிழக அரசு இன்றைக்கு விவசாயிகள் அரசியல் காரணங்களுக்காக போராடுவதாக கூறுவது ஏற்புடையது அல்ல.  கெயில் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியபோது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா விவசாயிகளை அழைத்து கருத்துக்களை கேட்டு விவசாயிகள், அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்தார். ஆனால், இன்றைக்கு கருத்து கேட்பும் இல்லை. குழுவும் இல்லை. அமைச்சர் தங்கமணியை 4 முறை கூட்டியக்க விவசாயிகள் நேரில் சந்தித்து பேசினோம். ஆனால், எங்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கூட வாங்கியது கிடையாது.

முதல்வரிடம் பேசிவிட்டு கூறுகிறேன் என்ற ஒற்றைச்சொல்லை தவிர வேறு எதுவும் கூறமாட்டார். பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில்தான் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை மிகவும் குறைவாக வழங்கப்படுகிறது. எங்களுக்கான உரிய இழப்பீட்டு தொகையை வழங்காததால்தான் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, எங்களை போராட தூண்டுவது தமிழக அரசு மட்டுமே. இவ்வாறு ஈசன் கூறினார். அமைச்சர் நிலத்தில் அமைக்க முடியுமா? தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில் , விளை நிலங்களில் மின் கோபுரங்கள் சென்றால் கர்ப்பிணி பெண்களின் கருவுக்கு ஆபத்து ஏற்படும். அதேபோல் அந்த நிலத்தில் உழுது விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

விளைநிலங்களில் மின்கோபுரம் செல்வதை இளிச்சவாய் விவசாயி கேட்கமுடியாது, அடிமை விவசாயி யாரும் எதிர்த்து பேச முடியாது, கேட்டால்  காவல்துறையை கொண்டு அடக்குமுறைகள் ஏவப்படும். ஏனெனில் காவல்துறையே முதல்வரின் கையில் உள்ளது. விவசாயிகளின் நிலத்தின் வழியாக மின்கோபுரம் அமைக்கும் மின்வாரிய அதிகாரிகள், மின்துறை அமைச்சர் தங்கமணியின் விவசாய நிலத்தில் மின்கோபுரம் அமைப்பார்களா?  முதல்வர் எடப்பாடி, மற்ற அமைச்சர்களின் நிலத்தின் வழியாக மின்கோபுரம் அமைக்க முடியுமா? முடியாது. ஏனென்றால் உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் அனைவரின் வேலை பறிபோகும். இவ்வாறு அவர் கூறினார்

Related Stories: