சிதம்பரம் கோயிலில் நர்சை தாக்கிய தீட்சிதர் சஸ்பெண்ட்: 5 ஆயிரம் அபராதமும் விதிப்பு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சனை செய்ய வந்த நர்சை கன்னத்தில் அறைந்த தீட்சிதர், 2 மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் ₹5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் சிதம்பரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் செல்வகணபதி. இவரது மனைவி லதா (51). இவர் காட்டுமன்னார்கோவில் அருகே ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார். கடந்த 16ம் தேதி தனது மகனின் பிறந்தநாளையொட்டி லதா, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். கோயில் பிரகாரத்தில் உள்ள முக்குருனி விநாயகர் சன்னதியில் மகன் பெயரில் அர்ச்சனை செய்யுமாறு கூறி தேங்காய், பழத்தட்டை கொடுத்துள்ளார்.அப்போது அங்கிருந்த தீட்சிதர் தர்சன் என்கிற நடராஜ் தேங்காயை மட்டும் உடைத்துவிட்டு, லதாவிடம் பழத்தட்டை கொடுத்துள்ளார்.

அதற்கு லதா ஏன் அர்ச்சனை செய்யவில்லை எனக் கேட்டபோது, அவரது கன்னத்தில் தீட்சிதர் தர்சன் அறைந்து தள்ளியுள்ளார். இதை அங்கிருந்த பக்தர்கள் தட்டிக்கேட்டனர்.தகவலறிந்த சிதம்பரம் நகர போலீசார் வந்து விசாரணை நடத்தினர். காயமடைந்த லதா சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது புகாரின்படி சிதம்பரம் நகர போலீசார், தீட்சிதர் மீது பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடராஜர் கோயில் தீட்சிதர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பெண் பக்தரை தாக்கிய தீட்சிதர் தர்சன் என்கிற நடராஜை 2 மாதம் சஸ்பெண்ட் செய்வது, அவருக்கு ₹5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம் அவர் 2 மாதங்களுக்கு எந்த பூஜையிலும் பங்கேற்க முடியாது.

Related Stories: