தமிழ் பல்கலை பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு மாஜி துணைவேந்தர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு: ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி

தஞ்சை: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு புகாரை தொடர்ந்து முன்னாள் துணைவேந்தர், முன்னாள் பதிவாளர்  உட்பட 4 பேர் மீது  ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 10 பேராசிரியர்கள், 11 இணை பேராசிரியர்கள் என 21 பேர் கடந்த 2017 மே மாதம் நியமனம் செய்யப்பட்டனர். இதில் முறைகேடு, விதிமீறல் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்னாள் பேராசிரியர் முருகேசன், சமூக ஆர்வலர் நெடுஞ்செழியன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு ஊழல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டது.  இதைதொடர்ந்து, தஞ்சாவூர் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 பேர் தகுதியற்றவர்கள் என தெரியவந்தது. இவர்களுக்கு நேர்முக தேர்வில் தேர்வுக்குழு உறுப்பினர்கள் அதிக மதிப்பெண்களை வழங்கியுள்ளனர். நேர்முக தேர்வு நடைபெறுவதற்கு முன்பாக 10 பேரிடம் ₹15 லட்சம் முதல் ₹40 லட்சம் வரை லஞ்சம்  பெற முயற்சித்துள்ளனர்.

இதேபோல் தமிழ் பல்கலைக்கழக விதிகளை மீறி 70 ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு தினக்கூலி அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான ஊதியம் அரசு நிதியுதவி மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி வருவாயிலிருந்து வழங்கப்படுகிறது. தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட இவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இதனால் நிதி இழப்பு ஏற்படுவது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன், முன்னாள் பதிவாளர் முத்துக்குமார், முன்னாள் பதிவாளரின் நேர்முக உதவியாளர் சக்தி சரவணன், தொலைநிலை கல்வி முன்னாள் இயக்குனர் பாஸ்கரன் ஆகியோர் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டன.இவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

Related Stories: