×

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வு ரத்து: புதிய வரி விதிக்க குழு அமைப்பு என அமைச்சர் வேலுமணி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உயர்த்தப்பட்ட புதிய சொத்து வரி ரத்து செய்யப்படுகிறது. புதிய வரி விதிப்பு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அதுவரை பழைய சொத்து வரி செலுத்தினால் போதும் என்று அமைச்சர் வேலுமணி அறிவித்துள்ளார்.இதுகுறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில் 1998க்கு பின்னரும், பிற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 2008க்கு பின்னரும் சொத்து சரி உயர்த்தப்படவில்லை. சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் 1.4.2018 முதல் சொத்து சீராய்வு மேற்கொள்ள அரசால் 19.7.2018ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதன் அடிப்படையில் வாடகை அல்லாத சொந்த குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம் மிகாமலும், வாடகை குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம் மிகாமலும், பிற வகை கட்டிடங்களுக்கு 100 சதவீதம் மிகாமலும் சொத்து வரியை உயர்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பின்னர் அரசு 26.7.2018ல் வாடகை மற்றும் வாடகை அல்லாத குடியிருப்பு கட்டிடங்கள் அனைத்திற்குமே சொத்து வரி 50 சதவீதம் மிகாமல் உயர்வு செய்யப்படும் என அறிவித்தது. இதன் அடிப்படையில் 1.4.2018 முதல் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சொத்து வரி சீராய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.விரிவாக்கம் செய்யப்பட்ட 6 மாநகராட்சிகள், 4 நகராட்சி பகுதிகளில் ஏற்கனவே இணைக்கப்பட்ட பகுதிகளில் முந்தைய நகர்ப்புர உள்ளாட்சி அமைப்பில் உள்ளது போன்றே திருத்தப்பட்ட மண்டல அடிப்படை மதிப்பீட்டின்படி சொத்து வரி உயர்வு செய்து சொத்துவரி விதிக்கப்பட்டது.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகள் தவிர அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் 1.4.2018க்கு முன்பு குறைவான அளவீடு செய்யப்பட்ட கட்டிடங்கள் மற்றும் சொத்து வரி குறைவாக விதிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு மறு அளவீடு செய்யப்பட்டு, சொத்து  வரி மறு நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் பல்வேறு தரப்பினரிடம் இருந்து சொத்து வரி உயர்வை குறைக்க கோரி பல்வேறு கோரிக்கைகள் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு வந்துள்ளது.அதன் அடிப்படையில் ஏற்கனவே சட்டமன்றத்தில் கடந்த 8.7.2019 அன்று அறிவித்தபடி, உயர்த்தப்பட்ட சொத்து வரி சீராய்வு குறித்த மறுபரிசீலனை செய்யப்படும்.தமிழக முதல்வர் உத்தரவின்பேரில், உயர்த்தப்பட்ட சொத்து வரி மறுபரிசீலனை செய்ய ஏதுவாக தற்போது அரசு நிதித்துறை (செலவினங்கள்) செயலாளர் தலைமையில், நகராட்சி நிர்வாக ஆணையர், பேரூராட்சிகளின் இயக்குநர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் அடங்கிய உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு மறு கணக்கீடு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் திருத்தப்பட்ட மண்டல அடிப்படை மதிப்பீட்டின்படி உயர்வு செய்யப்பட்ட சொத்துவரி, மிக அதிகமாக உள்ளதென பல்வேறு குடியிருப்போர் நல சங்கங்கள், வணிகர் சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் மீது ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளேன்.அதுவரையில் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வுக்கு முன்னர், 1.4.2018 அன்று செலுத்தி வந்த அதே சொத்து வரிதான் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் கட்டிட உரிமையாளர்கள் செலுத்தினால் போதும். ஏற்கனவே கூடுதலாக செலுத்திய சொத்து வரி, அடுத்த அரையாண்டுகளில் ஈடு செய்யப்படும். இது குறித்து தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் வேலுமணி கூறினார்.

* சொத்து வரி சீராய்வுக்கு முன்னர், 1.4.2018 அன்று செலுத்தி வந்த அதே சொத்து வரியை செலுத்தினால் போதும்.
* ஏற்கனவே கூடுதலாக செலுத்திய சொத்து வரி, அடுத்த  அரையாண்டுகளில் ஈடு செய்யப்படும்.

Tags : Cancellation ,Velumani ,corporations ,municipalities ,Municipal ,Tamil Nadu Nadu ,Panchayats , Tamil Nadu, Municipal, Municipal ,Panchayats,committee structure
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...