×

மாணவர்களுக்‌கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் தேர்தல் கல்வியறிவு மன்றம்: 100 சதவீத வாக்குப்பதிவு எட்ட புதிய முயற்சி

சென்னை : தேர்தல் நடைமுறை தொடர்பாக மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் தேர்தல் கல்வியறிவு மன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகில் நடைபெறும் தேர்தல்களில் மிகப் பெரிய தேர்தல் நடைமுறையாக இந்திய தேர்தல் நடைமுறை உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 89 கோடி  வாக்காளர்கள் உள்ளனர். எனினும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 67 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவானது.  இந்நிலையில் தேர்தல் தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் தேர்தல் கல்வியறிவு மன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில அளவிலான பயிற்சி வகுப்புகள் கோவை, வேலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 6 மையங்களில் நடந்து வருகிறது.வரும் 22ம் தேதி வேலூரில் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் சென்னை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவாண்ணாமலை, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் பிரிவு சிறப்பு தாசில்தார், தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தேர்தல் விழிப்புணர்வு (ஸ்வீப்) பொறுப்பு அலுவலர், தேர்தல் பதிவு அதிகாரிகள், மகளிர் திட்டத்தின் திட்ட மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.

தேர்தல் கல்வியறிவு மன்றத்தின் மாநில அளவிலான பயிற்சியாளர்களான சென்னை மாநகராட்சி  உதவி கல்வி அலுவலர் முனியன், மதுராந்தகம் மண்டல வருவாய்  அலுவலர் லட்சுமி, வேலூர் மண்டல வருவாய் அலுவலர் கணேசன் ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர். தொடர்ந்து, மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த மன்றம் அனைத்து பள்ளிகளிலும் தொடங்கப்படும். ஒரு மையத்துக்கு நான்கு பயிற்சியாளர்கள் இருப்பார்கள். இவர்களுக்கான பொறுப்பு அதிகாரி மன்றத்தின் செயல்பாடு குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை அளிப்பார். 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த மன்றங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். குறிப்பாக தேர்தல் அறிவிப்பு முதல் தேர்தல் முடிவுகள் வரையிலான அனைத்தும் விளக்கம் அளிக்கப்படும்.  இந்த மன்றத்தின் மூலம் தேர்தல் நடைமுறை தொடர்பாக இளம் வயது மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை எட்ட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

29ம் தேதிவரை மாநில அளவிலான பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதை தொடர்ந்து  மாவட்ட அளிவில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு 3 மாதத்திற்குள் அனைத்து பள்ளிகளிலும் தேர்தல் கல்வியறிவு மன்றங்கள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனி கல்வி திட்டம்தேர்தல் கல்வியறிவு மன்றங்கள் மாணவர்களுக்கு எந்த மாதிரியான பயிற்சி அளிக்க வேண்டும் என்பது தொடர்பான கல்வி திட்டம் தயார் செய்யப்பட்டு தனி புத்தகமாக அனைத்து பள்ளிகளுக்கும் அளிக்கப்பட உள்ளது. இதன்படி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஒவ்வொரு மன்ற வகுப்பிலும் பயிற்சி அளிக்க வேண்டும்.

Tags : schools , create, Election ,literacy ,percent turnout
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...