சரக்குகளை விடுவிக்க 50 ஆயிரம் லஞ்சம் பெற்ற சுங்கத்துறை அதிகாரி கைது

* 4.71 லட்சம் பறிமுதல் * சிபிஐ அதிரடி

சென்னை: சரக்குகளை விடுவிக்க ₹50 ஆயிரம் லஞ்சம் பெற்ற சுங்கத்துறை அதிகாரியை சிபிஐ காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவருக்கு சொந்தமான இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ₹4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை துறைமுகத்தில் சரக்குகளை மதிப்பீடு செய்யும் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் முனுசாமி. இவர், சென்னை துறைமுகத்தில் உள்ள மதுக்குமார் என்பவரின் சரக்குகளை விடுவிக்க வேண்டும் என்றால் ₹80 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதை தொடர்ந்து லஞ்சத் தொகையை ₹ 50 ஆயிரமாக குறைத்துள்ளார். இந்நிலையில் முதற்கட்டமாக ₹40 ஆயிரத்தை வினோத் என்பவரிடம் மதுக்குமார் கொடுத்துள்ளார்.

மீதம் உள்ள ₹10 ஆயிரத்தை மதுக்குமாரிடமிருந்து முனுசாமி பெற்றபோது சிபிஐ போலீசார் முனுசாமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.மேலும் முனுசாமிக்கு உடந்தையாக இருந்த வினோத்தையும் சிபிஐ கைது செய்தது. இதை தொடர்ந்து, இவர் மீது லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு சொந்தமான இடத்தில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் ₹4.71 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: