×

தேனிலவுக்கு மனாலி சென்றபோது பரிதாபம் பாராகிளைடரிலிருந்து கீழே விழுந்த புதுமாப்பிள்ளை சாவு: திருமணம் நடந்த 10வது நாளில் நேர்ந்த சோகம்

சென்னை: திருமணம் நடந்து பத்தாவது நாளில் புது மணப்பெண் முன்னிலையில் கணவர் வானில் இருந்து கீழே விழுந்து இறந்த சம்பவம் நெஞ்சத்தை பதற வைத்தது. தேனிலவுக்கு சென்றபோது ஏற்பட்ட இந்த சோகம் கேட்டவர்களின் நெஞ்சத்தை உருக்கியது.
சென்னை அமைந்தகரை திருவீதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அரவிந்த் (27). மருத்துவ துறையில் வேலை பார்த்தார். இவரது மனைவி பிரீத்தி, கனரா வங்கி ஊழியர். இவர்களுக்கு கடந்த வாரம் திருமணம் நடந்தது. இந்நிலையில் புதுமண ஜோடி, தேனிலவு கொண்டாட இமாச்சல பிரதேசம் மனாலிக்கு செல்ல முடிவு செய்தனர். அங்கு பல இடங்களை சந்தோஷமாக சுற்றி பார்த்தனர். இமாச்சலில் உள்ளமனாலி டோபி என்ற இடத்தில் பாராகிளைடரில் சுற்றுலா பயணிகள் பறப்பது பிரபலமானது. இதை பார்த்ததும் அரவிந்த்துக்கும் பறக்கவேண்டும் என்ற ஆசை வந்தது. இதையடுத்து மனைவி சம்மதத்துடன் நேற்று முன் தினம்  பாராகிளைடர் விமானி ஹரு ராம் என்பவருடன் அரவிந்த் பறந்துள்ளார். இதை தரையில் இருந்து   பிரீத்தி தன் கணவர் வானத்தில் பறப்பதை ஆர்வத்துடன் பார்த்து ரசித்து கொண்டிருந்தார்.வானில் பறந்த சிறிது நேரத்திலேயே பாராகிளைடரில் அமர்ந்திருந்த அரவிந்த்தின் பாதுகாப்பு பெல்ட் இடுப்பில் இருந்து கழன்றதாக தெரிகிறது. இதனால் நிலைகுலைந்த அரவிந்த் பாராகிளைடரில் இருந்து தவறி கீழே பள்ளத்தில் விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அரவிந்த் கீழே விழுந்ததில் பாராகிளைடரும் நிலை தடுமாறியது. இதனால் அவசரமாக கீழே இறங்க முயன்றதில் விமானி ஹரு ராமும் காயமடைந்தார். இதை பார்த்த போலீசார் ஹருராமை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அரவிந்த் இறப்புக்கு ஹருராமின் கவனக்குறைவே காரணம் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து ஹரு ராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  

அரவிந்த் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குல்லு மருத்துவமனைக்கு அனுப்பினர். கணவரின் உடலை பார்த்து பிரீத்தி கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க வைத்தது. இதையடுத்து பிரீத்தி கொடுத்த புகாரின் பேரில் பாட்லிகுஹால் போலீசார், 336 (உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் அல்லது மற்றவர்களின் தனிப்பாதுகாப்பு), 304 (கொலைக்கு உட்படாத உயிரிழப்பை ஏற்படுத்தும் குற்றம்) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  மருமகளுக்கு ஆறுதல் கூற வார்த்தை இல்லை: இதையடுத்து அரவிந்த், தந்தை பாஸ்கரன் அமைந்தகரையில் கண்ணீர் மல்க கூறியதாவது, ‘‘எனக்கு அரவிந்த் ஒரே மகன் என்பதால் அவனை மிகவும் செல்லமாக வளர்த்தேன். எனது மகன் மீது இருந்த பாசத்தால் ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தோம் அவன் படித்து சம்பாதித்து எங்களை பார்த்துவந்தான். அவனது திருமண வாழ்க்கை 10 நாட்களுக்குள் முடிவுக்கு வந்துவிட்டது. இப்பொழுது நானும் எனது மனைவியும் அநாதையாக நிற்கிறோம். எனது மகன் எங்களுக்கு இறுதி சடங்குசெய்வான் என்று எதிர்பார்த்தோம் .ஆனால் விதியின் விளையாட்டால் இந்த இளம் வயதில் எனது மகனுக்கு நாங்கள் இறுதிச்சடங்கை செய்யும் துயரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் இந்த நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது தேனிலவுக்கு சந்தோஷமாக சென்ற எனது மகன் தற்போது சடலமாக வீட்டிற்கு வரப்போகிறான் நாங்கள் இதனை எப்படி எதிர்கொள்வது அவளது வாழ்க்கைக்கு என்ன விடை காண்பது என்று தெரியவில்லை  மருமகளுக்கு ஆறுதல்கூற எங்களிடம் வார்த்தையில்லை. எனது மகனின் உடலை சென்னைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்து வருகிறோம். அரவிந்தின் உடல் இன்று மாலைக்குள் வரும் என எதிர்பார்க்கிறோம் என அதற்கு மேல் பேச முடியாமல் கண் கலங்கினார் அரவிந்தின் தந்தை.  அப்போது, அங்கு சுற்றியிருந்தவர்கள் கண் கலங்கினார்கள்.



Tags : Pudumapillai ,death ,honeymoon death ,Manali ,Puthi ,Puthumatha Pillai , Pity ,Manali , honeymoon,Puthumatha Pillai ,marriage
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு