திமுக கூட்டணியுடன் உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

சென்னை: “உள்ளாட்சி தேர்தலை திமுக கூட்டணியுடன் சந்திப்போம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், அ.சவுந்தரராசன், உ.வாசுகி, பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் தோழமை கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டு போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு மத்திய பாஜ அரசுக்கு அனைத்து வகையிலும் பணிந்து சென்று தமிழகத்தின் நலனை காவு கொடுத்து வருகிறது. மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால் பல்வேறு மக்கள் விரோத, விவசாயிகள் விரோத, தொழிலாளர்கள் விரோத திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகின்றன. ஊழல் இல்லாத துறையே இல்லை என்றாகி விட்டது.

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து திமுக மற்றும் தோழமைக் கட்சிகளோடு இணைந்தும், சுயேச்சையாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. தமிழகத்தில் ஊழலின் மொத்த உருவமான அதிமுக அரசையும், அதோடு கூட்டணி சேர்ந்துள்ள பாஜ அணியையும் வீழ்த்துகிற அரசியல் கடமையை நிறைவேற்றும் வகையில், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளோடு தொகுதி உடன்பாடு கண்டு தேர்தலை எதிர்கொள்வது என தீர்மானித்துள்ளது. உள்ளட்சித் தேர்தல் நடைமுறையை மாற்றியதற்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: