×

விழிப்புணர்வு மட்டும் போதாது... நடவடிக்கையும் தேவை.... மனுகொடுத்து டெங்குவை தடுக்க களமிறங்கிய பள்ளி மாணவர்கள்; கிருஷ்ணகிரி அருகே சுவாரஸ்யம்

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ெடங்கு கொசுவை ஒழிக்க, 7ம்வகுப்பு மாணவர்கள் மனு கொடுத்ததும், அதன்பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததும் கவனம் ஈர்த்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான நோய் காரணிகள் குறித்தும், டெங்கு பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. இதனை கவனமாக கேட்ட எம்ஜிஆர் நகரை சேர்ந்த மாணவர்கள் சிலர் தங்கள் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு நோய் காரணிகள் உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

அப்போது, அவர்களுடன் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 2 பேரும் இணைந்தனர். இந்த ஆய்வின்போது, எம்ஜிஆர் நகரில் ஆங்காங்கே குப்பைகள் மற்றும் தேவையற்ற பொருட்களில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழைநீர் தேங்கி இருந்தது. மேலும் இதன் காரணமாக அப்பகுதியில் அதிகளவு கொசு உற்பத்தியும் இருந்தது. இதனை சரிசெய்ய அரசு மற்றும் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணர்கள் பிரதீப், விஷ்வா, ஷாஜகான், சூர்யா ஆகிய 4 பேர் ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத் திற்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் இதுகுறித்து  3 முறை கூறியுள்ளனர். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அம்மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை மனுவாக எழுதி அதே அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் வழங்கினர்.

மனுவை பெற்று கொண்ட அதிகாரிகள், நேற்று துப்புரவு பணியாளர்களை அப்பகுதிக்கு அனுப்பி துப்புரவு பணிகளை மேற்கொள்ள செய்தனர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ெடங்கு காய்ச்சலால் பல பேர் உயிரிழந்து வருகின்றனர். எங்கள் பள்ளியிலும் ஒரு மாணவன் டெங்குக்கு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் எங்களுக்கு பள்ளியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில் கூறப்பட்டது போல் நாங்கள் எங்கள் பகுதியில் ஆய்வு செய்தோம். அப்போது, டெங்கு பரவும் சில காரணிகள் இருந்தது. எனவே இதனை சரிசெய்ய நாங்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தோம். எங்கள் மனு மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். இப்போது, எங்கள் பகுதியில் கொசு ெதால்லை குறைந்துள்ளது. மேலும் தேங்கி கிடந்த குப்பைகள் சரிசெய்யப்பட்டது. நடவடிக்கை எடுத்த அதிகாரி களுக்கு நன்றி,’’ என்றனர்.  

டெங்கு காய்ச்சல் குறித்து பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பெரியவர்கள் இதனை கண்டும் காணாமல் இருந்து வரும் நிலையில் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்கள் சுற்றுவட்டார பகுதிகளை ஆய்வு செய்ததுடன், சரிசெய்ய மனு அளித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

Tags : Krishnagiri , Petition, dengue, school children, Krishnagiri
× RELATED தடுப்பு கம்பிகளுக்கு வர்ணம் பூசும் பணி