கண்ணமங்கலம் அடுத்த, வெல்லூர் கிராமத்தில் கி.பி.10ம் நூற்றாண்டு ‘விஷ்ணு துர்கை’ சிற்பம் கண்டெடுப்பு

கண்ணமங்கலம்: திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த, வெல்லூர் கிராமத்தில் ‘சம்புவராயர் ஆய்வு மையத்தின்’ சார்பில் முனைவர் அமுல்ராஜ், வரலாற்று ஆய்வாளர் விஜயன் மற்றும் வெல்லூர் கிராமத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர் பீமன் ஆகியோர் நேற்று வரலாற்று தடயங்கள் குறித்த கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது வயல்வெளியில் சாய்ந்த நிலையில் இருந்த ‘விஷ்ணு துர்கை’ சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டது. இச்சிற்பம் குறித்து முனைவர் அமுல்ராஜ் கூறியதாவது: மகாவிஷ்ணுவை போல் காணப்படும் இச்சிற்பம் விஷ்ணுவின் தங்கையான ‘விஷ்ணு துர்கை’ சிற்பமாகும். நான்கு கரங்களுடன் பலகை கல்லில் சுமார் 4 அடி உயரம், 2 அடி அகலத்தில் காணப்படும் இச்சிற்பத்தின் முகம் சிதைந்த நிலையில் உள்ளது. தலையில் கூம்பு வடிவ கிரீடம் காணப்படுகிறது. வலது பின்கரத்தில் சங்கு உள்ளது. முன்கரம் அபய முத்திரை தாங்கியுள்ளது.

இடது பின்கரத்தில் சக்கரமும் முன்கரம் தொடைமீது வைத்த நிலையிலும் காணப்படுகிறது. கழுத்தில் நாற்புரி கழுத்தணி மாலையும் காதுகளில் காதணியும் உள்ளது. இடுப்பில் தொடைவரை நீண்ட ‘குறங்கு செறி’ அமைப்பிலான ஆடை உள்ளது. வலது புறமாக ஆடை முடிப்பு காட்டப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி.10 நூற்றாண்டாகும் என்றார். வரலாற்று ஆய்வாளர் விஜயன் கூறியதாவது: படைவீடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை கண்டறியப்பட்ட நடுகற்கள், சிற்பங்கள் யாவும் சம்புவராயர் காலத்தை சேர்ந்தவையாக உள்ள நிலையில் இச்சிற்பம் அதற்கு முன்பான காலத்தைச் சார்ந்ததாக உள்ளது. எனவே, வயல்வெளிகளில் காணப்படும் இத்தகு அரிய வரலாற்றுச் சிற்பங்களை எல்லாம் ஓரிடத்தில் பாதுகாக்க அரசு சார்பில் படைவீட்டில் ‘அருங்காட்சியகம்’ ஒன்று அமைத்துக் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

Related Stories: