கரணம் தப்பினால் மரணம்: அச்சுறுத்தும் அம்மாபட்டி சாலை... வாகன ஓட்டிகள் அவதி

திருமங்கலம்: திருமங்கலம் அருகே அம்மாபட்டி-வலையபட்டி இடையே 3 கி.மீ. தூரத்திற்கு புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் மண் நிரப்பாததால் மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது. திருமங்கலம் அருகே அம்மாபட்டியிலிருந்து ஏ.வலையபட்டிக்கு தார்ச்சாலை உள்ளது. சாலை அமைத்து நீண்டநாள்களாகி விட்டதால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதிதாக சாலை அமைக்கப்பட்டது. பழைய தார்ச்சாலையின் மேல் புதிதாக போடப்பட்ட இந்த சாலை தரைமட்டத்திலிருந்து உயரமாக காணப்பட்டது. புதிய தார்சாலையால் மகிழந்த கிராம மக்களுக்கு சாலை பணி முடிவடைந்ததும் பள்ளங்களால் தொல்லை ஏற்பட துவங்கியது.

வலையபட்டி வரை புதிய சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறையினர் மண் போடாமல் விட்டு சென்றுவிட்டனர். இதனால் உயரம் அதிகரித்துள்ள சாலையையொட்டி அம்மாபட்டியில் மூன்று இடங்களில் பாதாள பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் இந்த பள்ளங்கள் சாலையையொட்டி அமைந்துள்ளன. சாலையோரத்தில் மணல் பரப்பி செல்லுமாறு நெடுஞ்சாலைத்துறையை அம்மாபட்டி பொதுமக்கள் வலியுறுத்தியும் கண்டுகொள்ளவில்லை. புதிதாக அமைக்கப்பட்ட சாலையால் மகிழ்ந்த மக்களுக்கு அதிகாரிகளின் அலட்சியத்தால்  சாலையோர பள்ளங்கள் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

இதுகுறித்து அம்மாபட்டியை சேர்ந்த ரமேஷ், பாண்டி கூறுகையில், ‘கடந்த காலங்களை காட்டிலும் சற்று உயரமாக அமைக்கப்பட்ட சாலை ஓரத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் மண்போட்டிருந்தால் வாகனம் வரும் போது எதிரே வரும் வாகனங்கள் நின்று செல்ல முடியும். தற்போது பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வரும் போது அம்மாபட்டி-வலையபட்டி சாலையில் ஒதுங்கக்கூட முடியவில்லை. இதுதவிர காவிரி கூட்டுக்குடிநீர் பைப்லைன் பல இடங்களில் சாலை பணியின் போது உடைக்கப்பட்டதால் கடந்த சில தினங்களாக காவிரி குடிநீர் வரவில்லை. அதேபோல் கண்மாய் வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாயும் அடைபட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறையினர் மறுத்துவிட்டதால் தற்போது ஊராட்சி நிர்வாகத்திடம் சாலையோரத்தில் மண் நிரப்ப வலியுறுத்தி வருகிறோம்’ என்றனர்.

Related Stories:

>