பறிமுதல் செய்த லாரியை ஒப்படைக்க கோரி லாரி உரிமையாளர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: நாகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

நாகை: பறிமுதல் செய்த லாரியை ஒப்படைக்க கோரி லாரி உரிமையாளர் நாகை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணியளவில் அலுவலக வேலை நேரம் முடிந்து  ஊழியர்கள்  வெளியே  வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் கார்கள் நிறுத்தும்  இடத்தில் 6 பேர் அமர்ந்து இருந்தனர். அவர்கள் கையில் கேன் மற்றும்  பாட்டில்களில் மண்ணெண்ணெய் இருந்தது. அவர்களிடம் ஊழியர்கள் நடத்திய விசாரணையில்,  விழுப்புரம் தாலுகா வளவனூர் அருகே சுந்தரபாளையம் மாரியம்மன் கோயில் தெருவை  சேர்ந்த சுரேஷ்(39), அவரது மனைவி கோமதி(38), குழந்தைகள் பார்கவி(13),  மகிமா(11), கீர்த்திக்(10), லாரி டிரைவர் தணிகாசலம் என தெரிய வந்தது.

சுரேஷ் கூறுகையில், கடந்த 15ம் தேதி நாகை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் மணல்மேடு பந்தநல்லூர் சாலையில் வாகன தணிக்கையில்  ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த தனது லாரியை திருட்டு மணல்  அள்ளிச்செல்வதாக கூறி பறிமுதல் செய்தனர். லாரியை ஒப்படைக்க கோரி மனு கொடுத்துள்ளேன். அதிகாரிகள் மனுவை பெற்றுக்கொண்டு காலை முதல் எந்த பதிலும் சொல்லாமல் உள்ளனர். லாரி எங்கே இருக்கிறது என்று  கேட்டால் அதற்கும் முறையான பதில் தரவில்லை. எனவே எனது டிரைவர் உட்பட குடும்பத்தோடு தற்கொலை செய்த கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். தகவல் அறிந்து  அங்கு வந்த சுரங்கத்துறை அதிகாரிகள், சுரேஷை கலெக்டர் அலுவலகத்துக்குள் அழைத்தனர். ஆனால்  அவர் லாரியை விடுவித்தால் தான் இந்த இடத்தை விட்டு செல்வேன். இல்லையெனில் மண்ணெண்ணெயை ஊற்றி குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினார்.

இதுகுறித்து  நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த  அருகில் சென்றனர். உடனே சுரேஷ், கையில் வைத்திருந்த  மண்ணெண்ணையை தனது தலையில் ஊற்றி தனது சட்டைப்பையில் வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்தார். இதை பார்த்த இன்ஸ்பெக்டர், சுரேஷ் மீது விழுந்து தீப்பெட்டியை பறித்து  வீசினார். அதற்குள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் தாங்கள்  வைத்திருந்த தண்ணீரை எடுத்து வந்து சுரேஷ் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது ஊற்றினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்த சுரேஷ்  மற்றும் அவரது குடும்பத்தினரை நாகூர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து லாரி சுரேசிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories:

>