காட்டாம்புளி குளக்கரையில் வாமன கல் கண்டெடுப்பு: தொல்லியல் துறையின் ஆய்வு மேற்கொள்ளப்படுமா?

நெல்லை: நெல்லையில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் காட்டாம்புளி என்னும் கிராமம் உள்ளது. இவ்வூரின் கரையானது காட்டாம்புளி மற்றும் பாலாமடை கிராமங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது. தற்போது காட்டாம்புளி குளக்கரையில் தமிழக அரசின் குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் தூர் வாரும் பணிகள் நடந்து வருகிறது. குளத்தின் மதகுகள், மடைகள் புதியதாக அமைக்கப்பட்டு வருகின்றன. இக்குளக்கரையில் சுடலைமாட சாமி கோயில், இசக்கியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களும் உள்ளன. அப்பகுதியில் தற்போது பணிகள் நடக்கும்போது, பழங்காலத்தை சேர்ந்த ஒரு வாமன கல் கிடைத்துள்ளது.

மடை செப்பனிடும் பணியை மேற்கொண்டபோது அதில் கிடைத்த கற்களை அங்கு ஓரத்தில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். அதில் ஒரு கல் வாமன உருவம் தென்படுவதை அப்பகுதியை சேர்ந்த காளிராஜன் என்பவர் கண்டுபிடித்தார். இக்கல்லில் வாமன குடையை கையில் ஏந்திய மனிதன் பொறித்த உருவம் காணப்படுகிறது. இக்கல் வைணவ கோயில்களில் எல்கையை குறிக்க பயன்படுத்தப்படும் கல்லாக கருதப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அர்ச்சகர் சிதம்பரம் கூறுகையில், ‘‘காட்டாம்புளியில் தற்போது கிடைத்துள்ள கல்லில் பல அபூர்வ தகவல்கள் தென்படுகின்றன. கல்லின் வரைந்துள்ள உருவத்தின் இடது கையில் ஒரு கலசமும், வலது கையில் வாமன குடையும் பொறிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் தொல்லியல் பொருட்கள் நிறைந்து கிடக்கலாம் என கருதுகிறோம். நீண்டநாட்களாக புதைந்து கிடக்கும் இக்கல்லில் பொறித்துள்ள உருவமானது புதியதாக இருப்பதுபோலவே தோன்றுகிறது. தொல்பொருள் துறையினர் இந்த வாமன கல்லை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி, அதற்கான காலக்கட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும்.’’ என்றார்.

Related Stories: