×

கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து காயம் அடைந்த பெண்ணுக்கு வலதுகாலில் அறுவை சிகிச்சை செய்து தகடு வைப்பு

கோவை: கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து காயம் அடைந்த பெண்ணுக்கு வலதுகாலில் அறுவை சிகிச்சை செய்து தகடு வைக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 11ம்தேதி சென்னையில் இருந்து விமானத்தில் கோைவ வந்தார். அவரை வரவேற்று, அவினாசி ரோட்டில் பல இடங்களில் சாலையோரம் அ.தி.மு.க. கொடிக்கம்பம் வைக்கப்பட்டிருந்தது. அன்றையதினம், பீளமேடு கோல்டு வின்ஸ் பகுதியில் சாலையோரம் நடப்பட்டிருந்த 15 அடி உயர சவுக்கு கொடிக்கம்பம் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. அப்போது அவ்வழியாக லாரியை ஓட்டி வந்த டிரைவர், லாரி மீது கொடிக்கம்பம் விழாமல் இருக்க லாரியை சற்று திருப்பினார். அப்போது அவ்வழியாக மொபட்டில் சென்ற ராஜேஸ்வரி (22), பைக் ஓட்டி வந்த விஜய் ஆனந்த் ஆகியோர் மீது லாரி மோதியது. இதில் ராஜேஸ்வரி கீழே விழுந்தார். லாரியின் சக்கரம் ராஜேஸ்வரி காலில் ஏறி இரு கால்களும் நசுங்கியது.

இதேபோல விஜய் ஆனந்த் காயமடைந்தார்.  விஜய் ஆனந்த் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், ராஜேஸ்வரி, கோவை நீலம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனம் எழுந்தது. இதுகுறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் முருகனை (53) கைது செய்தனர். விபத்து நடந்த இடத்திற்கு அருகே கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டிருந்தது. தனியார் கடை முன் இருந்த அந்த கேமரா காட்சி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து பார்த்துள்ளனர். அதில் கொடிக்கம்பம் தொடர்பான காட்சிகள் பதிவாகி இருந்ததாக தெரிகிறது. ஆனால் அந்த காட்சிகள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ராஜேஸ்வரியின் காலில் ரத்தநாளம் அடைபட்டு, ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டதால் அவரது இடதுகாலை, முட்டியில் இருந்து அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 17-ம் தேதி இரவு அவரது இடதுகால், முட்டியில் இருந்து முழுவதுமாக அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வலதுகாலில் அறுவை சிகிச்சை செய்து தகடு வைக்கப்பட்டது. மருத்துவமனையில் டாக்டர்கள் 7 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து தகடு வைத்துள்ளனர். ராஜேஸ்வரி சுயநினைவுக்கு வந்தாலும் வழியை தாங்க முடியாது என்பதால் அவரை மயக்க நிலையிலேயே மருத்துவர்கள் வைத்துள்ளனர். மேலும் ஒருவாரம் தீவிர சிகிச்சை பிரிவிலியே இருப்பார் எனவும் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.


Tags : Goa , Coimbatore, AIADMK, Woman, Surgery
× RELATED பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: வாலிபர் கைது