உள்ளாட்சிகளில் பழைய சொத்துவரி முறையே தொடரும்...உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய குழு அமைப்பு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை: உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சிகளில் பழைய சொத்துவரி முறையே தொடரும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சிகளில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையிலான இந்த குழுவில், நகராட்சி நிர்வாக ஆணையர், பேருராட்சி இயக்குநர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழு மறுபரிசீலனை செய்து அறிக்கை அளிக்கும் வரை, பழைய சொத்து வரியே வசூலிக்கப்படும். சொத்து உரிமையாளர்கள் 2018ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு முந்தைய சொத்து வரியை செலுத்தினால் போதும். உயர்த்தப்பட்ட விகிதத்தின்படி சொத்து வரி செலுத்தியவர்களுக்கு, கூடுதலாக செலுத்தப்பட்ட வரித்தொகையானது அடுத்தடுத்த ஆண்டுகளில் ஈடு செய்யப்படும். சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டதற்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை, என்று கூறியுள்ளார். சென்னையில் கடந்த 1998க்கு பிறகு சொத்துவரி மாற்றி அமைக்கப்படவில்லை. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சொத்துவரியை உயர்த்த பலமுறை பரிந்துரை வழங்கியும் சொத்து வரியில் மாற்றம் செய்யவில்லை.

இதனால் 1998ம் ஆண்டிலிருந்து சொத்து வரி உயர்த்தப்படாமல் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவ்விவகாரத்தில் 2 வாரங்களுக்குள் முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டது. இதனை அடுத்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்க கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்குச் சொத்து வரி 50 விழுக்காடு உயர்த்தியும், வாடகை குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 விழுக்காடு உயர்த்தியும், குடியிருப்பு அல்லாத வணிகக் கட்டடங்களுக்கு 100 விழுக்காட்டுக்கு மிகாமலும் சொத்து வரி உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: