சிங்காநல்லூர் குளத்தில் 115 வகை பட்டாம் பூச்சிகள்

கோவை : கோவை மாவட்டத்தில் பெய்து வரும் பருவமழையால் சிங்காநல்லூர் குளத்தில் பட்டாம் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்பகுதியில் 115 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கோவை சிங்காநல்லூர் குளம் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக கோவை மாநகராட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குளம் சுமார் 288 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு, 720 வகையான பல்லுயிர்கள் வாழ்கின்றன என கண்டறியப்பட்டுள்ளது. இந்த குளத்திற்கு வெளிநாட்டு பறவைகளும் வருகின்றன. 200க்கும் மேற்பட்ட மூலிகை தாவரங்கள் உள்ளன.

இந்நிலையில், தற்போது பெய்து வரும் பருவமழையின் காரணமாக சிங்காநல்லூர் குளத்தில் பட்டாம் பூச்சிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. குளக்கரை சாலைகளில் உள்ள செடிகள், புதர்களில் பல வண்ணங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாம் பூச்சிகளை காணமுடிகிறது. இப்பகுதியில் காமன் ரோஸ்(ரோஜா வண்ணத்தி), கிங் ரோஸ்(ராஜா வண்ணத்தி), மஞ்சளாத்தி, எமிகிரண்ட், பொன்னை வெள்ளையன், திட்டு வெள்ளையன், ஜோக்கர், காமன் பைலட், கரும்புள்ளி நீலன், எலுமிச்சை அழகி, காமன் காஸ்டர் உள்பட 115 வகையான பட்டாம் பூச்சி இனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், மிக அரிய வகையான 14 மி.மீ. அளவு கொண்ட பிளாக் ஸ்பாடட் பைரட் என்ற பட்டாம் பூச்சி இனமும் இங்கு அதிகளவில் காணப்படுகிறது. குளக்கரை சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடைப்பயணம் மேற்கொண்டால் சுமார் 20க்கும் மேற்பட்ட பட்டாம் பூச்சி இனங்களை எளிதாக பார்க்க முடியும். வார இறுதி நாட்களில் குளக்கரையை சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவர்களும் தினமும் பலர் குளக்கரைக்கு வந்து பட்டாம் பூச்சிகள், தாவரங்கள், பறவை இனங்களை ரசித்து வருகின்றனர்.  

இது குறித்து பட்டாம் பூச்சி ஆராய்ச்சியாளர் மோகன் கூறுகையில், “பட்டாம் பூச்சிகள் இயற்கையின் குறியீடு என கருதப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழையினால் சிங்காநல்லூர் குளத்தில் ஏராளமான புதிய செடிகள், தாவரங்கள் துளிர்விட்டுள்ளன. இப்பகுதியில், மனிதர்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பட்டாம் பூச்சி இனப்பெருக்கம் அதிகளவில் நடந்து ஆயிரக்கணக்கான பட்டாம் பூச்சிகள் உற்பத்தியாகியுள்ளது. சுமார் 115 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. பட்டாம் பூச்சிகளுக்கு தனியாக உணவு அளிக்கும் வகையிலும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

Related Stories: