ஆகாயத்தாமரைகளை நவீன முறையில் அகற்ற ரூ.1.5 கோடியில் இயந்திரம்

கோவை :  கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில்  நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, குமாரசாமி குளம், செல்வ சிந்தாமணி குளம்,  பெரியகுளம்,  வாளாங்குளம், சிங்காநல்லூர் குளம், குறிச்சி குளம் என 9 குளங்கள் உள்ளன. கோவையில் மிகப்பெரிய பரப்பளவுடைய பெரியகுளம், வாலங்குளம், சிங்கநல்லூர் குளம் ஆகிய குளங்களில் ஆகாயத்தாமரை அதிக அளவில் ஆக்கிரமித்து குளத்தின் அழகையே கெடுத்து வருகிறது. மேலும் ஆகாயத்தாமரைகளால் குளக்கரை பகுதியில் உள்ள நீர் மாசுடைவது, குளக்கரை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவது, குளங்களில் வாழும் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுவது போன்றவை ஏற்படுகின்றது. இந்த ஆகாயத்தாமரைகளை அகற்ற தற்போது மாநகராட்சி நிர்வாகம் ஜே.சி.பி. இயந்திரங்களை பயன்படுத்தி வருகிறது. 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டாலும் மீண்டும் அவை வந்து விடுகின்றன.

ஜே.சி.பி. இயந்திரங்களை கொண்டு ஆகாயத்தாமரைகளை ஒரளவு மட்டுமே வேருடன் அகற்றப்பட முடிகிறது . இதனால் ஆகாயத்தாமரைகள் மீண்டும் மூன்று மாதங்களில் வளர்ந்துவிடுகிறது. எனவே நவீன முறையில் ஆகாயத்தாமரைகளை வேருடன் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.1.5 கோடி மதிப்பில் இயந்திரம் வாங்கப்பட உள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், குளங்களின் நடுவே மிதந்து கொண்டு ஆகாயத்தாமரைகளை வேருடன் அகற்றிவிடும் தன்மையை இந்த இயந்திரம் கொண்டது. இதனால் மீண்டும் ஆகாயதாமரைகள் அவ்வளவு சீக்கிரமாக வராது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள குளங்கள் அனைத்திலும் இதனை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

Related Stories: