முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணையம் சார்பில் ஐவர் கொண்ட துணை கண்காணிப்பு குழு ஆய்வு

திருவனந்தபுரம்: மத்திய நீர்வள ஆணையம் சார்பில் முல்லை பெரியாறு அணையில் ஆய்வு நடைபெறுகிறது. தமிழகத்தின் நீர் ஆதாரமான முல்லை பெரியாறு அணையில் ஐவர் கொண்ட துணை கண்காணிப்பு குழுவின் ஆய்வானது நடைபெற்று வருகிறது. துணை குழு தலைவரும் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளருமான சரவணகுமார் தலைமையில் நடைபெறும் இந்த ஆய்வில் தமிழக கேரள அரசு பிரதிநிதிகள் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அணையின் பிரதான அணை, பேபி அணை, மதகு பகுதிகள், சுரங்க பகுதிகள் ஆகியவை ஆய்விற்கு உட்படுத்தப்படுகின்றன. மேலும் அணையின் மதகுகளின் இயக்கம் சரிபார்க்கப்படுகிறது. அணையின் சுரங்க பகுதிகளில் இருந்து வழியும் கசிவுநீரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதன் அளவீடும் கணக்கீடு செய்யப்படுகிறது.

அணை ஆய்விற்கு பின் குமுளியில் உள்ள மூவர் கண்காணிப்பு குழு அலுவலகத்தில் இந்த துணை குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அணை ஆய்வுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அவை அனைத்தும் மூவர் கண்காணிப்பு குழு தலைவரும் மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளருமான குல்சன்ராஜிற்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது. முல்லை பெரியாறு அணையை பொறுத்தவரையில் 2019ம் ஆண்டு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளாக கருதப்படும் கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழை ஆகியன எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை என கூறப்படுகிறது.

இதற்கு காரணம் அணை நீர்மட்டம் இந்தாண்டு அதிகபட்சமாக 128 அடி வரையே உயர்ந்துள்ளது. தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும் அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர வாய்பிருப்பதாகவும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பும், ஆவலும் அதுவாகவே உள்ளது. எனவே பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அணையில் மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த இந்த ஆய்வும், ஆலோசனை கூட்டமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

Related Stories: