சோனியா, ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதற்கு எதிர்ப்பு..: மக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு

புதுடெல்லி: சோனியா, ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். கடந்த 1984ம் ஆண்டு, பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபின் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படைப் பிரிவு உருவாக்கப்பட்டது. கடந்த 1991ம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபின் எஸ்பிஜி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, அனைத்து முன்னாள் பிரதமர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்குவது என மாற்றியமைக்கப்பட்டது. அந்த வகையில், பிரதமர், முன்னாள் பிரதமர்கள், அவர்களின் குடும்பத்தினர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்பிஜி அதிகாரிகள் பாதுகாப்பளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் 3 மாதங்களுக்கு ஒருமுறை எஸ்பிஜி பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், அமைச்சரவைச் செயலாளர், உளவு அமைப்புகள், பாதுகாப்பு அமைப்புகள் கூடி ஆலோசனை நடத்தும்.

அந்த ஆலோசனை கடந்த மே மாதத்தில் நடைபெற்றபோது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எஸ்பிஜி பாதுகாப்பை திரும்பப் பெற்று அதற்கு பதிலாக இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது. இனி அவர்களுக்கு, எஸ்பிஜி பாதுகாப்பல்லாது, இசட் பிளஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவித்தது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று கூடிய மக்களவையில் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு, பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பை வாபஸ் பெற்றதற்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் திமுக எம்பிக்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கடும் விவாதம் நடத்தினர். அப்போது, காங்கிரஸ் அளித்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் அனுமதிக்காததால் திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

Related Stories: