புயல், பூகம்பத்தை கணிக்கும் கால்நடைகளும், பறவைகளும்!

புயல், பெருமழை, சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படப்போவதை சுற்றுச்சூழல் மாற்றங்களால் கூட மனிதனால் கணிக்க முடியாது.

ஆனால் -இந்த உணர்வுகளை விலங்குகள், பறவைகளால் உணரமுடியும்.காற்று வீசும் வேகம், மிகக்குறைந்த ரிக்டர் அளவில் ஏற்படும் நில அதிர்வுகள், புவியீர்ப்பு விசையில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்துக் கொள்ளும் ஆற்றலை பகுத்தறிவு இல்லாததாக நாம் கருதும் உயிரினங்கள் முன்கூட்டியே உணர்கின்றன என்பதுதான் விஷயம்.

*பூனைகள், ரொம்ப உஷார். இயற்கைச் சீற்றத்தை முன்கூட்டியே உணர்ந்து வீடுகளில் இருந்து வெளியேறி எங்காவது மரப்பொந்துகளுக்குள் பதுங்கிக் கொள்ளும்.

*நிலநடுக்கம் ஏற்படும் முன் மாடுகள் இங்கும் அங்குமாக ஓடும். அவை தங்கியுள்ள கொட்டகையிலிருந்து வெளியே வர முயற்சிக்கும். பசு மாடுகள் மேடான பகுதியிலிருந்து பள்ளத்தை நோக்கி ஓடினால் நில அதிர்வு ஏற்படப் போகிறது என்று அர்த்தம். புயல் ஏற்படுவதற்கு மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் முன்பாக பசுக்கள் இரவில் தொடர்ந்து கத்திக் கொண்டிருக்கும். தீவனம் சாப்பிட அடம் பிடிக்கும்.

*மழைக்கு முன்பாக எறும்புகள் வரிசையாக மரம் ஏறத் தொடங்கும்.

*குதிரைகளைப் பொறுத்தவரை நிலநடுக்கம் வரப்போவதை உணர்ந்தால் மனிதர்களை தாக்க முயற்சிக்கும்.

*புயல், நிலநடுக்கம் வரப்போவதை உணர்ந்தால் கோழிகள் முட்டையிடுவதை நிறுத்திக் கொள்ளும். இருப்பதிலேயே உயரமான இடத்துக்குச் சென்று அமர்ந்துக் கொண்டு கூவிக்கொண்டே இருக்கும். புயல் உண்டாகும் முன்பே பறவைகள் நிலப்பரப்பின் மீது மிகத்தாழ்வாக பறக்கின்றன. அந்நேரத்தில் நிலப்பரப்பின் மீது திரியும் புழு, பூச்சிகளை வேட்டையாடுவதில் தீவிரம் காட்டுகின்றன.

*நில நடுக்கம் ஏற்படப் போகிறதை வெள்ளாடுகள் உணர்ந்தால் கொட்டகைக்குள் போகாது. மழை வரப் போகிறது என்றால் செம்மறி ஆடுகள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாக நின்றுக் கொள்ளும்.

*நில நடுக்கம் ஏற்படுவதற்கு முன்பாக வீட்டு நாய்கள் தங்கள் எஜமானர்களை கடிக்கத் தொடங்கும். இல்லையேல் எஜமானர் பின்னேயே ஓடித் தொடர்ந்து குரைக்கும். ஓலமிட்டுக் கொண்டே இருக்கும். மனிதர்களோடு விரோதம் பாராட்டும்.

*சுனாமிக்கு முன்பாக கடல்வாழ் மீன்கள் நீருக்கு வெளியே குதித்து குதித்து தங்களை காத்துக் கொள்ளும்.

மனிதர்கள் எப்படி?

நாம் நகர்ப்புற சமூகமாக மாறுவதற்கு முன்பு கிராமங்களில் வசித்த நம்முடைய முன்னோர் கால்நடைகள் மற்றும் பறவைகள் காட்டும் இந்த சமிக்ஞைகளை உற்றுக் கவனித்து வரப்போகும் ஆபத்துகளை முன்கூட்டியே உணர்ந்துக் கொள்வார்கள். கால்நடைகளும், பறவைகளும் தரும் இந்த இலவச ஜோசியத்தை இப்போதெல்லாம் நாம் அவ்வளவாக பயன்படுத்திக் கொள்வதில்லை.

-டாக்டர் வி.ராஜேந்திரன்

Related Stories: