×

சோளிங்கர் மலைக்கோயில் ரோப் கார் பணிகள் நிறைவடையாததால் சுவாமி தரிசனத்துக்கு ₹3 ஆயிரம் கொடுத்து டோலியில் செல்லும் அவலம்

*பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை

சோளிங்கர் :  சோளிங்கர் மலைக்கோயில் ரோப் கார் பணிகள் நிறைவடையாததால் சுவாமி தரிசனத்துக்கு ₹3 ஆயிரம் கொடுத்து டோலியில் செல்லும் அவல நிலை உள்ளது. எனவே, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சோளிங்கரில் 108 வைணவ திவ்ய தலங்களில் ஒன்றாக விளங்கும் பிரசித்தி பெற்ற யோக லட்சுமிநரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் ஒரே பாறையால் ஆன 750 அடி உயரமுள்ள மலைக்குன்றின் மீது அமைந்துள்ளது.

இங்கு யோக நரசிம்மர், அமிர்தவள்ளி தாயார் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். சுவாமியை தரிசிக்க 1305 படிகள் ஏறி செல்ல வேண்டும். இதன் அருகே 350 அடி உயரமும் 406 படிகளும் கொண்ட  சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். ஆண்டு முழுவதும் யோக நிலையில் அருள்பாலிக்கும் நரசிம்மர் கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக ஐதீகம். இதனால் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் இக்கோயிலில் கார்த்திகை பெருவிழா 5 வார விழாவாக கொண்டாடப்படுகிறது.இக்கோயிலுக்கு ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசித்து செல்கின்றனர்.

இந்நிலையில், சோளிங்கர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் மலைமீது ஏறிச் சென்று சுவாமியை தரிசிக்க சிரமமாக உள்ளதால் எளிதில் சுவாமியை தரிசிக்கும் வகையில் ரோப்கார் அமைக்க பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 2006ம் ஆண்டு தமிழக அரசு ₹6 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ரோப்கார் அமைக்கும் பணிகளை துவங்கியது. இதைத்தொடர்ந்து மீண்டும் கடந்த 2014ம் ஆண்டு மறுமதிப்பீட்டில் ₹9.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரோப் கார் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கார்த்திகை பெருவிழாவிற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது.

ஆனால் பணிகள் நிறைவடையவில்லை. இதுவரையிலும் 85 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. இந்நிலையில் கார்த்திகை பெருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ரோப்கார் பணிகள் நிறைவடையாததால்  நடந்து செல்ல முடியாத முதியோர்கள் தங்களது உடல் எடைக்கு ஏற்ப ₹3 ஆயிரம், ₹4 ஆயிரம் என கொடுத்து டோலி தூக்கும் தொழிலாளர்கள் மூலம் மலைக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்தனர்.

ரோப்கார் பணிகளை விரைந்து முடிக்காததால் வசதி உள்ளவர்கள் ₹3 ஆயிரம் பணம் கொடுத்து செல்கின்றனர். வசதி இல்லாத பக்தர்கள் மலைக்கு சென்று சுவாமியை தரிசிக்க முடியாமல் ஏமாற்றமடைகின்றனர். எனவே ரோப்கார் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : hill ,Sholingar ,Swami ,Sholingar Dharsan ,Dharisanam , Sholingar ,Doli ,swami Dharisanam,Rope car,
× RELATED சேதமான சாலையில் ஆம்புலன்ஸ் வர...