பைப்லைன் பகுதிக்கு மாற்று இடம் கேட்பதால் எய்ம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்

*கட்டுமான பணிகள் மேலும் தாமதமாகும்

திருப்பரங்குன்றம் : மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் உள்ள இந்தியன் ஆயில் பைப்லைன் பகுதிக்கு பதிலாக கட்டுமான நிறுவனம் மாற்று இடம் கோரி உள்ளது. இதனால் கட்டுமான பணிகள் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டு தாமதமாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மதுரை மாவட்டம், தோப்பூரில் ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் சுமார் 224 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இந்த இடத்தை கடந்த 2018, ஜூலை மாதம் மத்திய சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் எச்ஐடிஇஎஸ் எனும் இந்திய மருத்துவ கட்டுமான பணிகள் நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர்கள், அதிகாரிகள் குழு பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 இதைத்தொடர்ந்து அந்த குழுவின் பரிந்துரைப்படி அதே ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்கட்டமாக மண், கல் மாதிரிகள் சேமிக்கப்பட்டு மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள மத்திய மண் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.  பின்னர் இரண்டாம் கட்டமாக கடந்த மாதம் எய்ம்ஸ் அமையவுள்ள இடங்களில் இருந்து மீண்டும் கல், மண் மாதிரிகள் சோதனைக்காக மத்திய மண் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மத்திய குழு, ஜப்பானிய நிதி குழு ஆகியோர் எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை பார்வையிட்டனர்.

பின்னர் 224 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் கட்டிடம் முக்கோண வடிவில்  சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு கட்டப்படவுள்ளதாகவும், இந்த இடத்தில் பல அடுக்கு மாடிகள் கட்டும் அளவிற்கு மண்ணின் தன்மை உறுதியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தியன் ஆயில் பைப்லைன் செல்லும் பகுதியான 20 ஏக்கர் பரப்பளவில் கட்டிடங்கள் கட்டப்படாது எனவும், அந்த இடத்தில் குடிநீர் இணைப்புகள் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ கட்டுமான பணிகள் நிறுவன அலுவலக வட்டாரங்கள் சார்பில் தகவல் வெளியானது.

இப்பகுதிக்கு செல்ல மத்திய சாலை திட்டத்தின் கீழ் ரூ.21.20 கோடி செலவில் புதிதாக நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக 12  இடங்களில் தரைப்பாலம் கட்டும் பணிகள் துவங்கியது.  தொடர்ந்து நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியும் துவங்கிய நிலையில், கட்டுமான பணிகளை மேற்கொள்ளவிருக்கும் மத்திய மருத்துவ கட்டுமான பணிகள் நிறுவனத்திற்கு மாநில அரசு முன் அனுமதி வழங்காததால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி துவங்கவில்லை என ஆர்டிஐ மூலம் கடந்த ஜூலை மாதம் தகவல் வெளியானது.

அதன்பின் தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து முன் அனுமதி சான்று வழங்கும் பணிகள் நிறைவடைந்தது. இந்நிலையில் இந்தியன் ஆயில் பைப்லைன் செல்லும் குறிப்பிட்ட பகுதி தற்போது எய்ம்ஸ்க்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு நடுவே செல்வதால் மருத்துவமனை பாதுகாப்பு கருதி அந்த இடத்தில் கட்டிட பணிகள் அமைப்பதில் சிக்கல் இருப்பதாக மத்திய அரசு கட்டுமான பணிகள் நிறுவனம் கூறி வருவதாக தெரிகிறது. இதனால் பைப்லைன் செல்லும் பகுதிக்கு பதிலாக மாற்று இடம் கோரி வருகிறது. இதில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படாத காரணத்தால் வரைபடம் உள்ளிட்ட பலவற்றை மாற்ற வேண்டிய தேவை இருப்பதால் சுற்றுச்சுவர் உள்ளிட்ட பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டும் இன்னும் எந்தவொரு பணியும் துவங்கவில்லை. இதனால் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் துவங்குவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பணிகள் மேலும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: