இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒளிந்திருக்கும் பெண்மை

ஓஷோ தனது புத்தகம் ஒன்றில் ஆண்களை பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண்மை இருக்கிறது. அதனை வெளிப்படுத்தி அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை” என்கிறார்.

அந்த தாய்மை உணரப்பட வேண்டும். ஆண்களுக்கான சமூக பொறுப்பை உலகுக்கு உணர்த்த வேண்டுமென என்பதற்காகத்தான், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ம் தேதி, ‘சர்வதேச ஆண்கள் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.

‘‘பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக்கூடாது’’ - என்று சினிமாவில் வேதனையாக ஒரு பாடல் ஒலித்தாலும், ஆண்களால் பெண்கள் பல நாடுகளில் சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தாயை பார்க்கச் சென்ற தனது 9 வயது மகளை, ஒரு தந்தை கதற, கதற தெருவில் அடித்த காட்சியை பார்த்திருப்பீர்கள்.

 இப்படி தந்தையால், கணவரால் பெண்கள் நாள்தோறும் சித்திரவதையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தை எடுத்துக் கொள்வோமே? ஒரு குடும்பத்தலைவராக ஆணைத்தான் நாம் முன்னிறுத்துகிறோம். உடல்ரீதியாக ஒரு ஆண் வலுவானவராக கருதப்படுகிறான். அவன் அந்த குடும்பத்தின் பாதுகாவலனாகவும் இருந்து வருகிறான். அவனது உத்தரவுகள் அங்கே மதிக்கப்படுகிறது. அதே நேரம் அவன் தனது தாய், மனைவி, குழந்தைகளின் மனநிலை, அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் அவன் குடும்பத்தலைவன் என்ற பெயருக்கு பொருத்தமானவனாக மாறுகிறான்.

அதை தவிர்த்து, ‘‘நான் ஆண்... இப்படித்தான் இருப்பேன். நீங்கள் எனது உத்தரவை மீறி நடந்தால் தண்டிக்கப்படுவீர்கள்’’ என ஒரு சர்வாதிகாரி மனநிலையில், குடும்பத்தை கொண்டு செல்லக்கூடாது. அது தவறு. நாடெங்கும் சிறுமிகள், இளம்பெண்கள் மற்றும் பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் சம்பவங்களை எண்ணும்போது, ஒரு ஆண் தனது பலத்தை பயன்படுத்தி, பெண் சமூகத்தை இழிவுப்படுத்த நினைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆண்கள் மீது இந்த சமூகம் வைத்துள்ள அடிப்படை பார்வை மாறவில்லை.

இதுதான் ஒரு ஆண் மகனை ஒரு பொறுப்பான தலைவராகவும், பெண்கள் மீது வன்கொடுமையை ஏவுபவனாகவும் மாற்றி விடுகிறது. இந்த நிலை இனியாவது மாற வேண்டும். அதே நேரத்தில், சமூகத்தில் ஆணுக்கான பிரச்னைகள் அதிகம். ஆண்களை விட பெண்கள் அதிக மன அழுத்தங்களுக்கு ஆளானாலும், ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு பணிச்சுமை, கடன் தொல்லை, குடும்பத்தை கவனிக்க முடியாமை இப்படி பல காரணங்களை கூறலாம். பொதுவாகவே, ஆண்களுக்கு ஒரு பிரச்னை இருந்தால் அதை அவர்களாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒரு ஆணுக்கு, ஒரு பெண்ணின் பிரச்னையையும் தீர்க்கும் வல்லமை இருப்பதாக நம்பப்படுகிறது.

ஆண்களுக்கும் பதற்றம், கவலை எல்லாமே உண்டு. உணர்ச்சிகள் என்பது மனித இயல்பு. உணர்ச்சிகள் என்பது பெண்களுக்கு மட்டுமே சொந்தமல்ல. ஆணின் உணர்ச்சிகளையும் புரிந்து கொண்டு, அதனையும் இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும். தற்போது ஆண், பெண் இருவரும் வேலை செய்கின்றனர். இருவருக்கும் பொறுப்பு உண்டு. ஆனால், திருமணத்திற்கு மாப்பிளை தேடும்போது, பெண்ணை விட ஆண் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுவாக உள்ளது. இதுபோன்ற எதிர்பார்ப்புகள் ஆண்கள் மீது திணிக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர்கள் மீது இந்த சமூகம் வைக்கும் எதிர்பார்ப்புகள் தரும் அழுத்தத்தை எல்லா ஆண்களாலும் சமாளிக்க முடியாது என்கின்றனர் மனநல ஆலோசகர்கள். பெண்களை மதித்து போற்றுவதே பேராண்மை என்பதை, ஒவ்வொரு ஆணும் புரிந்து கொண்டாலே போதும். ஆண்களுக்கு வாழ்த்துகள்...!

Related Stories: