சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை தாக்கிய தீட்சிதர் 2 மாதத்துக்கு சஸ்பெண்ட்: தீட்சிதர்கள் நிர்வாக அமைப்பு நடவடிக்கை

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணை தாக்கிய தீட்சிதர் 2 மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளார். சிதம்பரம் வ.உ.சி தெருவை சேர்ந்த லதா என்பவர், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், தனது மகனின் பிறந்த நாளை கொண்டாட நடராஜர் கோவிலுக்கு அவர் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது கோயில் பிரகாரத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்ய தேங்காய் மற்றும் பழ தட்டை லதா கொடுத்துள்ளார். ஆனால் தீட்சிதர் வெறும் தேங்காயை உடைத்துவிட்டு அர்ச்சனை செய்யாமல் திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தீட்சிதரிடம் கேட்டதற்கு அவர், லதாவை திட்டி கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது.

இதனால் காயமடைந்த லதா அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தீட்சதர் மீது பொது இடத்தில் ஆபாசமாக பேசியது, மிரட்டல் விடுத்தது, பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், தீட்சிதர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் நிர்வாக அமைப்பின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பாலகணேசன், சம்பந்தப்பட்ட தீட்சிதர் தர்ஷனை இரண்டு மாதம் கோவிலில் பூஜை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளக்கூடாது எனக்கூறி, அவருக்கு ரூ.5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதோடு கண்துடைப்பாக உள்ளது என்று கூறியுள்ளனர்.

Related Stories: