அம்பேத்கார், பெரியாரை ஆதரிப்பவர்கள் அறிவார்ந்த தீவிரவாதிகள் எனக்கூறிய பாபா ராம்தேவுக்கு சமூக வலைதளங்களில் குவியும் கண்டனங்கள்

ஹரியானா: டாக்டர் அம்பேத்கார், பெரியாரை ஆதரிப்பவர்கள் அறிவார்ந்த தீவிரவாதிகள் என கூறிய பாபா ராம்தேவுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. யோகா குரு பாபா ராம் தேவ் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது: டாக்டர் அம்பேத்கார் மற்றும் பெரியாரின் கொள்கைளை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கவலை தருவதாக உள்ளது.

அம்பேத்கார், பெரியாரின் ஆரவாளர்களைப் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது, அவர்கள் எல்லாம் அறிவார்ந்த தீவிரவாதிகளாக உள்ளனர். ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் உவைசி இந்த நாட்டை பிளவுபடுத்த முயற்சி செய்கிறார். நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு அவர் தலைவர் போல செயல்படுகிறார் என்று அவர் தெரிவித்தார்.

பாபா ராம்தேவின் பேச்சு நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அம்பேத்கார், பெரியார் ஆதரவாளர்கள் ராம்தேவுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டு வருகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் டுவிட்டர், பேஸ்புக் சமூக வலை தளங்களில் ராம்தேவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இதனால் கடந்த இரு தினங்களாக ராம்தேவுக்கு எதிரான கண்டனங்கள் டுவிட்டரில் டிரெண்டு ஆனது. இன்றும் சமூக வலைத்தளங்களில் பாபா ராம்தேவுக்கு எதிரான கண்டனங்கள் முதன்மை பெற்றன.

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் பாபா ராம்தேவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை  ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், “தந்தை பெரியார் சமூகத்தில் கீழ் நிலையில் உள்ள அடித்தட்டு மக்களுக்காக போராடினார். பெண் உரிமைக்கு குரல் கொடுத்தார். சாதி முறைக்கு எதிராக பேசினார். அவரது கொள்கைகளை தி.மு.க. பாதுகாக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து பாபா ராம்தேவை உடனே கைது செய்ய வேண்டும் என்று டுவிட்டரில் பதிவுகள் நேற்று குவிந்த வண்ணம் உள்ளது. பாபா ராம்தேவின் பதஞ்சலி பொருட்களை தடை செய்ய வேண்டும் என்றும் ஏராளமான பதிவுகள் போடப்பட்டன. அந்த பதிவுகள் நேற்று ஹேஷ்டேக்கில் டிரெண்டானது. பாபா ராம்தேவ் தனது பேட்டியில் “அறிவு தீவிரவாதம்” என்ற வார்த்தையை தானே உருவாக்கியதாகவும் பெரியாரை ஆதரிப்பவர்கள் அந்த நிலையில்தான் உள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பெரியார் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் ராம்தேவை கேலியும் கிண்டலும் செய்து கண்டனம்  தெரிவிக்கின்றனர்.

பெரும்பபாலானவர்கள் தங்களது டுவிட்டர் பதிவில், “சமூகத்தின் மறு மலர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்ககளை இழிவுபடுத்திய ராம் தேவை உடனே கைது செய்து தண்டிக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர். பலர் ராம்தேவ் மீது நாடு முழுவதும் வழக்கு தொடரப்பட வேண்டும் என்று டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர். பெரியாரின் ஆதரவாளர்களை விட டாக்டர் அம்பேத்காரின் ஆதரவாளர்கள் தான் அதிக அளவில் ராம்தேவை சமூக வலைத்தளங்களில் மிக, மிக கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பாபாவை ஊழல்வாதி என்றும் அவர் மத்திய அரசின் கருப்பு ஆடாக இருப்பதாகவும் நிறைய பேர் விமர்சித்துள்ளனர்.

இதனால் நேற்று சமூக வலைத்தளங்களில் “அரெஸ்ட் ராம்தேவ்”, “பாய்காட் பதஞ்சலி” ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டானது. ஜெய்பீம், பெரியார் வாழ்க என்ற ஹேஷ் டெக்குகளும் டிரெண்டானது. பாபா ராம்தேவை கேலி செய்து படங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. பாபா ராம்தேவ் அந்த டி.வி. பேட்டியில், “நமக்கு லெனின் மார்க்ஸ், மாவோ போன்ற தலைவர்கள் தேவை இல்லை. அவர்களது பார்வையும் கொள்கைகளும் இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது” என்று கூறி இருந்தார். இதற்கு இடதுசாரி கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாபா ராம்தேவ் பேச்சால் அவரது பதஞ்சலி கடைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 20 இடங்களில் பாபா ராம்தேவ் குழுமம் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

Related Stories: