ஈரோடு அருகே வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க நவீன இயந்திரத்தை கண்டுபிடித்து கல்லூரி மாணவர்கள் அசத்தல்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க நவீன இயந்திரத்தை கண்டுபிடித்து கல்லூரி மாணவர்கள் அசத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் குழு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் விதமாக மேரி டைம் ரெஸ்யூ போட் எனும் அதிநவீன இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர். தொடர்ந்து பி.வி.சி பைப், பேட்டரி மற்றும் மின்னணு சாதனங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம் சுமார் 80 கிலோ எடை வரை மனிதர்களை தாங்கும் திறன் கொண்டது. மேலும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் இந்த இயந்திரம் கடல், ஆறு, ஏரி உள்ளிட்டவைகளில் சிக்கி தவிர்ப்பவர்களை விரைந்து மீட்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த படைப்பானது அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டியில் முதல் சுற்றில் வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி இரண்டாவது சுற்றுக்கும் முன்னேறி உள்ளது. இந்த இயந்திரத்தை வடிவமைத்த மாணவி தெரிவித்ததாவது, இப்படைப்பானது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் நோக்கத்துடன் படைக்கப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பேட்டரியானது 5 மணி நேரம் வரை நீடிக்கும் திறன் கொண்டது. அதுமட்டுமின்றி இந்த இயந்திரம் நெட்வொர்க், சிக்னல், இன்டர்நெட் போன்ற தொழில்நுட்பங்கள் இன்றி பயன்படுத்தக்கூடியவையாகும். மேலும் இவை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கக்கூடியவை என தெரிவித்துள்ளார். இதனை போலவே ஈரோடு தனியார் கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கியவர்களை கண்டறியும் இயந்திரத்தை வடிவமைத்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: