×

முதல்வர் பழனிசாமி தலைமையில் தொடங்கியது தமிழக அமைச்சரவை கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய முடிவு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு இம்மாத  இறுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக தயாராகி வருகிறது. இரண்டு கட்சிகளிலும்  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்பமனுக்கள் பெறுதல்  உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் விருப்ப மனு வினியோகத்தை தொடங்கியுள்ளன. அடுத்த கட்டமாக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகளுடன் அவர்கள்  பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

அதே நேரத்தில் உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவுக்கு பின்னடைவு இந்த உள்ளாட்சி தேர்தலில் வரும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால்  உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் மக்களை கவரும் வகையில் ஆளும் அதிமுக புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்தும் சட்டத் திருத்தத்திற்கு இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு மேயர் பதவிக்கு கவுன்சிலர்கள்  மூலம் மறைமுகத் தேர்தல் நடத்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா சட்டத்திருத்தம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற பழனிசாமி அரசு, கடந்த 2018-ம் ஆண்டு, ஜெயலலிதா கொண்டு வந்த சட்டத்  திருத்தத்தில் மீண்டும் மாற்றம் செய்தது. இதனால், தமிழகத்தில் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி,  பேரூராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாக வாக்களித்து தேர்வு செய்யும் முறை மீண்டும் கொண்டு வரப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இதில் 3 லட்சம் கோடி அளவுக்கு தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில்   கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு முதல்வர் எடப்பாடி சுற்றுப்பயணம் சென்றார். இதன்மூலம் 8 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கான  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, வெளிநாட்டு நிறுவனங்களுக்கான அனுமதி உள்ளிட்டவை குறித்தும்  அமைச்சரவையில் ஆலோசிப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள், தலைமை செயலாளர், அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.


Tags : Palanisamy ,Cabinet ,meeting ,Tamil Nadu , Chief Minister Palanisamy launches Tamil Nadu Cabinet
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...