நடத்துனராக பணி தொடங்கி சூப்பர் ஸ்டார் ஆவோம் என கனவில் நினைத்திருக்க மாட்டார்: நடிகர் ரஜினிக்கு அதிமுகவின் நாளிதழ் நமது அம்மா பதிலடி

சென்னை: கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினி சூப்பர் ஸ்டாராவோம் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா பதிலடி கொடுத்து உள்ளது. நடிகர் கமல்ஹாசனின்  60 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் வகையில், கமல்-60 என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பேசிய நடிகர் ரஜினிகாந்த், ரஜினிகாந்த், முதல்வர் ஆவேன்  என எடப்பாடி பழனிசாமி, 2 ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.

பழனிசாமி ஆட்சி, 4 அல்லது 5 மாதங்களில் கவிழ்ந்து விடும் என 99 சதவீத மக்கள் கூறினார்கள். ஆனால் அற்புதம் நடந்தது. அனைத்து தடைகளையும் மீறி ஆட்சி தொடர்கிறது. அதுமாதிரியான அதிசயம், நேற்று நடந்தது; இன்று நடக்கிறது;  நாளையும் நடக்கும் என்றார். ரஜினிகாந்தின் இந்த பேச்சிற்கு பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அதிமுக அமைச்சர்கள் பலர் ரஜினிகாந்தின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.  இந்நிலையில் அதிமுக கட்சியின் நாளிதழான நமது அம்மா பதிலடி கொடுத்து உள்ளது.

அதில், “ரீல் தலைவர்களுக்கு மத்தியில் முதல்வர் பழனிசாமி ரியல் தலைவராக இருக்கிறார். சினிமாவில் வாய்ப்பு இல்லை என்றால், ஒரே ஒரு சினிமாவில் நடித்து புகழ் கிடைத்தால் கூட ரீல் தலைவர்கள் அரசியலுக்கு வர நினைக்கிறார்கள்.  முதல்வராக ஆசைப்படுகிறார்கள் . ஆனால் அதெல்லாம் நடக்காது. முதல்வர் பழனிசாமி கஷ்டப்பட்டு முன்னேறியவர். ஒரு தொண்டன் தலைவன் ஆக முடியும். தமிழ் உலகை ஆள முடியும் என்று நிரூபித்தவர். அவர் மக்களுக்கு சேவை  செய்து முன்னேறியவர்.

ரஜினி நடத்துனராக பணியை தொடங்கினார். அவரும் கூட தான் ஒரு சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் நினைத்திருக்க மாட்டார். காலம் கொடுக்கும் வாய்ப்பை பயன்படுத்தி உழைப்பவர்கள் முன்னேறுவார்கள். அப்படித்தான் முதல்வர்  பழனிசாமியும் முன்னேறினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: