×

பரபரப்புக்கு பஞ்சமில்லா சபரிமலை: ஐயப்பனை தரிசிக்க 45 வயதிற்கு உட்பட்ட 319 பெண்கள் முன்பதிவு...கேரள காவல்துறை தகவல்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்காக 45 வயதிற்கு உட்பட்ட 319 பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர். சபரிமலை வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு, பெண்கள் செல்ல தடை இல்லை என்று தீர்ப்பு வழங்கியது.  மேலும் இந்த வழக்கு விசாரணையை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கும் மாற்றியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கேரள அரசு, ‘‘இளம் பெண்கள் சபரிமலை செல்ல விரும்பினால் செல்லலாம். ஆனால் அவர்களுக்கு தனியாக எந்த  பாதுகாப்பும் அளிக்கப்படாது’’ என்று தெரிவித்தது. இதையடுத்து சபரிமலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 கட்டமாக 23 ஆயிரம் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் இளம் பெண்கள் வருகிறார்களா  என்பதை கண்காணிக்க தேவசம்போர்டு ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் சபரிமலைக்கு வந்த 10 இளம் பெண்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இந்த நிலையில் நிலக்கல் பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த  குழுவினர் வந்த பஸ்சை சோதனையிட்டனர். இதில் பயணித்த தனலட்சுமி என்ற பெண் 30 வயது உடையவர் என்பதும், லட்சுமி பார்வதி என்பவர் 40 வயது உடையவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இரு பெண்களையும் போலீசார்  நிலக்கலில் தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனம் செல்வதற்காக 45 வயதிற்கு உட்பட்ட 319 பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர். ஆன்லைனில் இவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாகவும், இதில் யாரும் கேரளாவைச்  சேர்ந்தவர்கள் இல்லை என்றும் அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பதிவு செய்தவர்களில் ஆந்திராவைச் சேர்ந்தவர்களே அதிகம் என்றும் 2-ம் இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பதாகவும் கேரள காவல்துறையினர் கூறியுள்ளனர். சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என  கேரள அரசு கூறியிருந்த நிலையில், கோயிலுக்கு வரும் பெண்கள் தங்குமிடம் குறித்து உச்ச நீதிமன்றம் சரியான வழிகாட்டுதல் வழங்கவில்லை என கேரள சட்டத்துறை அமைச்சர் ஏ.கே. பாலன் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு  ஏற்பட்டது.

ஒரே நாளில் 3.32 கோடி வருமானம்

சபரிமலையில் கடந்த மண்டல மகரவிளக்கு சீசனில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதால் பக்தர்கள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. இதனால் கடந்த ஆண்டு 100 கோடிக்கு மேல் வருமானம் குறைந்தது. இது தேவசம்போர்டுக்கு கடும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இம்முறை இளம் பெண்கள் திருப்பி அனுப்பப்படுவதால் குறிப்பிடத்தக்க அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை. நடை திறந்த அன்று முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கார்த்திகை  முதல் தேதியான 17ம் தேதி அன்று சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. அந்த ஒரே நாளில் 3.32 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 2.04 கோடி வருமானம் தான் கிடைத்தது.

தமிழகத்தில் தகவல் மையங்கள்:

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, தேனி, புளியரை, களியக்காவிளை ஆகிய இடங்களில் பயணத்தகவல் மற்றும் அசவுகரியங்களுக்கு தீர்வு காணும் பொருட்டு ஒவ்வொரு  ஆண்டும் தகவல் மையங்கள் திறக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறை, ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

 இத்தகவல் மையத்தை 16.11.2019 முதல் 31.1.2020 வரை கட்டணமில்லா தொலைபேசி சேவையாக 1800-425-1757 என்ற எண்ணில் அழைத்து பக்தர்கள் பயனுறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டி  கௌமாரியம்மன் கோயில் அருகில் தேனி-குமுளி சாலையிலும், குற்றாலநாத சுவாமி திருக்கோயில் சார்பில் பண்பொழி, திருமலைக்குமாரசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமாக  புளியரையில் உள்ள நெற்களஞ்சியம் அருகிலும் தகவல்  மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags : festival , 319 women under the age of 45 are booked to attend the festival ...
× RELATED குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்