சோதனையில் 10 கிலோ தங்கம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்: சோபிகா இம்பெக்ஸ் நிறுவன உரிமையாளருக்கு வருமானவரித்துறை சம்மன்

கரூர்: கரூர் வெங்கமேடு பகுதியில் வெளிநாடுகளுக்கு கொசுவலை ஏற்றுமதி செய்யும் சோபிகா இம்பெக்ஸ் தனியார் நிறுவனம் உள்ளது. கரூர் வெண்ணைமலையில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமும், நாவல்நகர் அருகே பேக்டரியும் இயங்கி வருகிறது. மேலும், தொழிற்சாலை ராம்நகரிலும், உரிமையாளர் வீடு சின்னாண்டாங்கோயில் பகுதியிலும் உள்ளன. இந்நிலையில் கடந்த 3 நாளாக திருச்சி, மதுரை, கோவை, கரூர், திருப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட ஐ.டி. அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தினர்.

தொடர்ந்து 4வது நாளாக நேற்று காலை வரை 3 இடங்களில் சோதனை நிறைவு பெற்றதோடு, மதியம் வரை நாவல்நகர் பகுதியில் உள்ள பேக்டரியில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 4வது நாளாக நடந்த சோதனையில் 10 கிலோ தங்க நகைகள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 32 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதோடு 430 கோடி அளவுக்கு வரிஏய்ப்பு நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், கரூர் சோபிகா இம்பெக்ஸ் நிறுவன உரிமையாளர் சிவசாமிக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சோபிகா இம்பெக்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையடுத்து திருச்சி வருமானத்துறை அலுவலகத்தில் வரும் வியாழக்கிழமை (நாளை மறுநாள்) ஆஜராகி விளக்கமளிக்க சிவசாமிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: