விழுப்புரம், கோவில்பட்டி, நாகர்கோவிலில் விவசாயிகள் போராட்டம்

விக்கிரவாண்டி: கரும்பு நிலுவை தொகையை உடனடியாக வழங்கக்கோரி திமுக விவசாய அணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பொன்முடி எம்எல்ஏ உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.  விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக விவசாய அணி மற்றும் விவசாய தொழிலாளர் அணி சார்பில் அரசு மற்றும் தனியார் ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய  தொகை மற்றும் நிலுவையை உடனடியாக வழங்க கோரி ஆலை நிர்வாகத்தை கண்டித்து முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்எல்ஏ தலைமை தாங்கினார். பின்னர் நிர்வாகிகளுடன் பொன்முடி எம்எல்ஏ, அதிகாரிகளிடம் மனு கொடுக்க சென்றார். அப்போது அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள் அங்கு வராததால் அவர்களை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் பொன்முடி எம்எல்ஏ கூறுகையில்,  மத்திய அரசு வழங்கிய தொகையிலேயே அரசு தர வேண்டிய நிலுவைதொகை 600 கோடி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் ₹1600 கோடியளவில் நிலுவை தொகை பாக்கி வைத்துள்ளது. தொழில் துறை அமைச்சர் ஏற்பாடு செய்து தருவதாக கூறி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை , என்றார். சாலை மறியல் செய்த பொன்முடி எம்எல்ஏ உட்பட சுமார் 300 பேரை  போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை கோவில்பட்டியை மையமாக கொண்டு நடத்த வலியுறுத்தி மதிமுகவை சேர்ந்த விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்: மத்திய, மாநில அரசுகள் வன உரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கில், மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு 10 கோடி குடும்பங்களின் நில வெளியேற்றத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி விவசாய தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories: