ஈரோடு சிவன் கோயிலில் அன்னதான அரிசி கடத்தல்: வீடியோ வெளியானதால் பக்தர்கள் அதிர்ச்சி

ஈரோடு:  ஈரோடு  கோட்டை ஆருத்ர  கபாலீஸ்வரர் கோயிலில் அன்னதானத்திற்கு வழங்கப்பட்ட அரிசி இரவு  நேரத்தில் கடத்தி செல்லப்பட்டது.  ஈரோடு கோட்டை பகுதியில் ஆருத்ர  கபாலீஸ்வரர் கோயில் உள்ளது. கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு மதிய  நேரத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக பக்தர்கள் அரிசி  மூட்டைகளை அன்பளிப்பு வழங்குவர்.  இந்நிலையில் கடந்த வாரம்  இரவு 10 மணிக்கு மேல் கோயிலில் இருந்து ஏராளமான அரிசி மூட்டைகள் 3 சக்கர  சைக்கிளில் எடுத்து சென்று ஒரு கடையில் கொடுப்பதுபோன்ற வீடியோ ஒன்று  வெளியானது. இந்த வீடியோவை பார்த்த பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

 அன்னதானத்திற்காக வழங்கப்படும் அரிசியை சிலர் முறைகேடாக கடைகளில்  விற்பனை செய்து பணம் சம்பாதித்து வருவதாகவும், கோயில் நிர்வாக  அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருவதாகவும், கோயில் செயல்  அலுவலர் அலுவலக ஊழியர்களுக்கு இதில் தொடர்பு  இருப்பதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக இந்து  அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  

இதுபற்றி கோயில் செயல் அலுவலர் கங்காதரன் கூறுகையில்,  ‘‘வீடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோயிலில் எலி  தொல்லை அதிகமாக இருப்பதாலும், மழையில் அரிசி நனைந்து விடும் என்பதால்  அரிசியை பாதுகாப்பாக வைப்பதற்காக அருகில் உள்ள கடைக்கு கொண்டு சென்றதாக  வீடியோவில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கோயில் இரவு  காவலாளி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுவது தவறு. காவலாளிக்கு 2  நாள் விடுப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

Related Stories: