5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: அரசு ஊழியர்கள், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அன்பரசு மற்றும் பொதுச்செயலாளர் செல்வம் தலைமையில் நேற்று சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் முழக்கமிட்டனர். இதுகுறித்து மாநில தலைவர் அன்பரசு கூறியதாவது: தமிழகத்தில் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில், அரசு பிறப்பித்துள்ள அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும். அரசு துறைகளில் அவுட்சோர்சிங் முறை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தை கைவிட வேண்டும். தமிழக அரசு துறைகளில் உள்ள நாலரை லட்சம் காலி பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும்.

சத்துணவு மற்றும் அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பெறும் மூன்றரை லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். இந்த 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை வாலாஜா சாலையில் இருந்து கோட்டை நோக்கி பேரணி நடைபெறும்” என்றார். ஆனால், போலீசார் கோட்டை நோக்கி பேரணி செல்ல முடியாதபடி ஆங்காங்கே பேரிகாடு தடுப்பு ஏற்படுத்தினர். குறிப்பாக, நேப்பியர் பாலத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, கடுமையான சோதனைக்கு பிறகே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. அதேபோன்று கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து தலைமை செயலகம் செல்லும் ஊழியர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி பலகட்ட விசாரணைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். பேரணி செல்ல அனுமதிக்காததை தொடர்ந்து, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே அரசு ஊழியர்கள் திரளாக கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Related Stories: