வன்முறையை தூண்டக்கூடிய வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வழக்கு: டிஜிபி, மாநில தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு

சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழக போலீஸ் டிஜிபி, மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். தொடர்ந்து ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திருவில்லிப்புத்தூரில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுகவை சார்ந்தவர்கள் உங்களிடம் ஓட்டு கேட்க வேண்டும் என்று வந்தால், வீடு புகுந்து அடியுங்கள். அவர்களை நைய புடையுங்கள், தாக்குங்கள், எது வந்தாலும் நான் பார்த்து கொள்கிறேன். நான் 16 வயதில் இருந்து பல்வேறு குற்ற வழக்குகளை பார்த்தவன்என ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். தற்போது உள்ளாட்சி தேர்தல் முறையாக நடைபெறாது என்று ஒரு அமைச்சரே ஒத்துக்கொண்டிருக்கிறார். அமைச்சர் பேசிய பேச்சுக்கு முதல்வர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கிற எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவிக்கவில்லை.

எனவே, இதை அதிமுகவின் அங்கீகரிக்கப்பட்ட பேச்சாக தான் கருதுகிறோம். ஆளுங்கட்சியில் இருந்து இப்படி பேச்சு வருவதை கண்டு கொள்ளாமல் தேர்தல் ஆணையமும், காவல்துறையும் இருந்தால் நிச்சயமாக தேர்தல் முறையாக நடக்காது. தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். டிசம்பர் மாதம் 13ம் தேதி இந்த வழக்கு வரவிருக்கிறது. இதை எல்லாம் நாங்கள் எடுத்து தெரிவிக்க இருக்கிறோம். அதற்கு முன்பாக டிஜிபியிடம் புகார் கொடுத்திருக்கிறோம். அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் மாநில தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுத்திருக்கிறோம். உடனடியாக ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது குண்டாஸில் வழக்கு போட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: