நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி டாக்டர் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

மதுரை: மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா பிடிபட்டார். இதைத் தொடர்ந்து உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  ஜாமீன் வழங்கக் கோரி வெங்கடேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் மீண்டும் மனு செய்தார். இம் மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் ராபின்சன் ஆஜராகி, ‘‘ முக்கிய குற்றவாளி இன்னும் கைதாகவில்லை. விசாரணை துவக்க கட்டத்தில்தான் உள்ளது. எனவே, ஜாமீன் வழங்கக் கூடாது‘‘ என்றார்.  அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘இந்த நிலையில் ஜாமீன் வழங்க முடியாது’’ என்றார்.

இதையடுத்து மனுதாரர் தரப்பில், ‘‘சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் 60 நாட்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், எங்கள் தரப்பில் மீண்டும் மனு செய்ய அனுமதிக்க வேண்டும்’’ எனக்கூறி மனுவை வாபஸ் பெறுவதாக கூறப்பட்டது.  இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வெங்கடேசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

Related Stories: